“என்னை நம்புங்கள். பெருந்தோட்ட மக்களான உங்களை எதிர்க்காலத்தில்  சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்.” – திகாம்பரம் சபதம் !

“என்னை நம்புங்கள். பெருந்தோட்ட மக்களான உங்களை எதிர்க்காலத்தில்  சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்.” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது ஹட்டன் புரூட்ஹில் தோட்டத்தில் ஏழு பேச்சஸ் காணியில் புதியதாக நிர்மானிக்கப்பட்ட 50 வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையில் நேற்று (19) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

 

மனிதனுக்கு வீடுகள் கட்டிகொடுத்து தண்ணி இல்லை என்றால் அதில் குடியேற முடியாது. ஆகவே இந்த வேலைத்திட்டம் மிகப்பெரிய வேலைத்திட்டம். இதனை செய்து கொடுத்த போதகர் பெருமாள் நாயகத்திற்கு நன்றி கூற வேண்டும். நான் அரசியலுக்கு வந்ததே மலையக மக்களுக்கு எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்பதை தவிர நாம் எதுவும்  தேடிக்கொள்வதற்கல்ல. காலம் காலமாக மலையக மக்களை லயத்திலேயே வைத்திருந்த தலைவர்கள் கடந்த 20 வருடத்தில் எனக்கு 2015 ஆண்டு தான் அரசியல் பலம் கிடைத்தது.

கடந்த தேர்தலின் போது தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு எங்கள் மூன்று பேரையும் மக்கள் கொண்டு வந்தார்கள். அவர்களை எங்கள் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டோம். இன்று நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது மின்சார துண்டிப்பு,மா இல்லை அரிசியில்லை,நாளுக்கு நாள் விலை அதிகரிப்பு.மக்கள் வாழ முடியாத நிலை உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் கூட அந்தந்த நாடுகள் அந்த மக்களை நன்றாக தான் வைத்துள்ளார்கள்.

ஆனால் நமது நாட்டில் இந்த அரசாங்கம் மக்களை வாட்டி வதைக்கின்றது.அதற்கு காரணம் கொரோன அல்ல என இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே தெரிவிக்கிறார்கள் பொய்யா ஆசை வார்த்தைகளை காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினை அவர்களுக்கு வாக்களித்த மக்களே இன்று இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு அதிகமாக பேசுவதற்கு அவசியமில்லை எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் கீழ் வரும் அரசாங்கத்தில நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு மலையக தக்களுக்கும் கட்டாயம் நல்லது நடக்கும் .அதில் ; மீண்டும் அமைச்சுப்பதவியினை பெற்று விட்டுச்சென்ற வேலைகளை தொடர்வோம். வடக்கில் இன்று மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள்.

நாம் ஆயிரம் ரூபாவுக்காக போராடுகிறோம். ஆயிரம் ரூபா ஒரு பிரச்சினையல்ல இங்குள்ள தொழிற்சங்கங்கள் தாத்தா பேரன் கொள்ளுபேரன் வந்து இந்த கூட்டு ஒப்பந்தத்தை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்த வரையில் மலையக மக்களை கடந்த அரசாங்கத்தில் சிறு தோட்ட உரிமையாளர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன் அரசாங்கம் தோல்வி கண்டதனால் செய்ய முடியாது போய்விட்டது.

என்னை நம்புங்கள் காலி மாத்தறை பகுதியில் தோட்டங்களை பிரித்து கொடுத்து எவ்வாறு சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றினார்களோ அதே போன்று எதிர்க்காலத்தில் உங்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன். கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் இரண்டு இலட்சம், நாலு லட்சம் மக்கள் தொகைக்கு இரண்டு பிரதேசசபைகள் தான் இருந்தன அதனை நான் அதிகரித்து கொடுத்தேன். வீடு கட்டிக்கொடுத்து அதற்கு அசல் ஒப்பனையினையும் பெற்றுக்கொடுத்தேன். இதனை வைத்து நீங்கள் வங்கி கடனை கூட பெற்றுக்கொள்ளலாம் ஆகவே எதிர்காலத்தில் வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், ராம், உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *