யாழில் வயோதிபப் பெண் படுகொலை – குற்றவாளி வழங்கியுள்ள வாக்குமூலம் !

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை (22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் டில்ரொக் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கெமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்தமை பதிவாகி இருந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் நேற்று காலை இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், வயோதிபப் பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையை செய்யுமாறு கேட்டிருந்தார்.

மறுநாள் சென்ற போது பட்டமரத்தை வெட்டுமாறு அயலில் உள்ள வீட்டில் கோடாரி மண்வெட்டியை வயோதிப் பெண் வாங்கித்தந்தார். எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.

அதனால் கோடாரியை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வயோதிப் பெண்ணின் பின்னால் சென்று தலையில் தாக்கினேன். அவர் சுயநினைவற்றிருந்தார். அவரது சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.

அத்துடன் தனது வீட்டுக்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் பை ஒன்றிலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *