உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் எந்தவொரு நாட்டின் சார்பாகவும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு பலமான பொருளாதாரம் இலங்கையிடம் இல்லை என்று கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியை இலங்கை இன்னும் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையால் எந்தவொரு நாட்டிற்காகவும் பேச முடியாது எனவும், ஒவ்வொரு நாட்டுக்கும் தமது நடவடிக்கைகளுக்கு ஒரு காரணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடாக பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், போரினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என இலங்கை நம்புவதாகவும் அவர் கூறினார். தற்போது உக்ரைனில் தங்கியுள்ள மக்களையும் மாணவர்களையும் அழைத்து வர துருக்கித் தூதரகம் மூலம் உக்ரைனுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தக் குழுவுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு உக்ரைனுக்கு இருப்பதாகவும், உக்ரைனில் இருந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், இந்த நெருக்கடியானது உக்ரேனுக்கான இலங்கையின் தேயிலை ஏற்று மதிக்கு இடையூறு விளைவிக்கும் என்றும், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்றும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறையும் என்றும் அவர் கூறினார்.