“ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் வவுனியா மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். நாட்டில் கொரோனா தாக்கம் இருந்தாலும் எமது மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதில் எமது அரசாங்கம் பின்நிற்கவில்லை. மக்களது பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.” என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 45 குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம், ஆடு மற்றும் கோழி வளர்ப்பிற்கான பணம், விவசாயத்திற்காக மோட்டர் மற்றும் வேலி முள்ளுக்கம்பி, சமையல் உபகரணங்கள், சலூன் உபகரணங்கள், பிரிண்டர், வாகன திருத்தும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த போது காணி பிரச்சனை, வன இலாகா பிரச்சனை தொடர்பில் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இதனை தீர்ப்பதற்காக நடமாடும் சேவை நடைபெற்றது. இதில், வேடிக்கையான விடயம் என்னவென்றால், நடமாடும் சேவை மேடையில் வீற்றிருந்து மக்களுக்கான காணிப் பத்திரங்களை எம்முடன் இணைந்து வழங்கிவிட்டு, அந்த மேடையில் இது ஒரு சிறந்த திட்டம். மக்களுக்கு பயனுள்ள திட்டம் என்று அங்கு வீற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் அவர்கள் தெரிவித்திருந்தார். அங்கு அந்த நிகழ்வை வரவேற்ற அவர் மேடையில் இருந்து இறங்கி செல்லும் போது ஊடகங்களிடம், இது ஒரு பிரயோசனமற்ற வேலைத்திட்டம் என கருத்து தெரிவித்திருந்தார். மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கபடவில்லையாம் என கூறியிருந்தார்.
அந்த இடத்தில் இரண்டு பேருக்கு இருக்கிற காணிப்பிரச்சனை கூட வந்தது. அதனை உடனடியாக அந்த இடத்தில் தீர்க்க முடியாது. பிரதேச செயலாளர் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை வழங்க வேண்டும். அவ்வாறான பிரச்சனைகளுக்கு பிரதேச செயலாளரை தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், 200 குடும்பங்களுக்கு மேல் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது. துரித கதியில் மத்திய தர வர்க்கத்தின் காணிகளில் குடியிருப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் காணி அமைச்சருடன் இணைந்து ஆராய்ந்தோம். அதற்கான முடிவு விரைவில் வரும். எனவே மக்களுக்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன. இனியும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.