காயமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சை

pak-2nd-test.jpg
மருத்துவமனையில் இலங்கை கிரிக்கெட் வீரர் பரணவிதாரண பாகிஸ்தானின் லாகூர் நகரில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து தாயகம் திரும்பியுள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை தேறிவருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தன, உபதலைவர் குமார் சங்கக்கார, ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தரங்க பரணவிதாரண, மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரர்களான திலான் சமரவீர, வேகப்பந்து வீச்சாளர்களான திலின துஷார, சுரங்க லக்மால், சுழல்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் ஆகியோருடன், அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர் பால் ஃபர்பிரீஸ் போன்றோர் காயம்பட்டிருந்தனர்.

புதனன்று நாடு திரும்பிய இவர்களில் நால்வர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தனர். தாக்குதலின் பின்னர் உடல் உளரீதியாக சோர்வடைந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தத்தமது பழைய நிலைக்குத் திரும்பிவருகிறார்கள் என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *