தொல்பொருள் திணைக்களத்தினால் நிறுத்தப்பட்ட கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமானப்பணியை தொடர இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அனுமதி !

தொல்பொருள் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தினுடைய கட்டுமான பணிகளுக்கு தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு நேற்று மாலை (03.03) மாலை அமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்திருந்தனர்.

வவுனியா, சமனங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயம் கடந்த 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது. குறித்த கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற்தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டட இடிபாடுகள் என்பன காணப்படுகின்றன.

அத்துடன், ஆலயத்தின் புனர்நிர்மாண கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் குறித்த ஆலயம் அமைந்திருந்த பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி என தெரிவித்து கட்டுமான பணிகளுக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகனத்தினர் மற்றும் அப் பகுதி மக்கள் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்தியிருந்ததுடன், கடந்த காலங்களில் கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் அவர்களின் கோரிக்கைக்கு அமைய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினர், மக்களின் கோரிக்கையினை கேட்டறிந்தனர்.

ஆலயத்தின் கட்டுமான பணிக்காக மாதிரி வரைபடத்தினை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கி தொல்பொருட்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தாத வகையில், புனர்நிர்மாண வேலைகளை முன்னெடுத்து ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள அமைச்சரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *