உக்ரைன் மீது 10வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகிறார்கள். அவர்கள் எல்லையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். வெளிநாட்டினரும் வெளியேறி வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தாக்குதல் தீவிரமடைந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் அங்கிருந்து வெளிநாட்டினர் வெளியேற முடியவில்லை. சண்டை நடக்கும் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல்னோவாகா ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. அந்த நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மீட்பு பணி தொடங்கி உள்ளது.
அதேசமயம் மற்ற பகுதிகளில் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்கிறது. குறிப்பாக தலைநகர் கீயுவில் தொடர்ந்து முன்னேறுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இன்று செர்னிவ் நகரில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ரஷ்ய படையின் வாகன அணிவகுப்பு கீயுவில் முன்னேறுகிறது.
இதனையடுத்து உக்ரைன் இராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பதிலடி கொடுக்கத் தொடங்கி உள்ளது. விமான தாக்குதலை சமாளிக்கும் வகையில் ஏவுகணைகளை செலுத்தியவண்ணம் உள்ளது. செர்னிவ் புறநகர்ப்பகுதியில் ரஷியாவின் ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.