இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று (05) இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டி இந்தியாவின் மொஹாலியில் நடைபெற்று வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
ரிசப் பந்த் 96 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தலைவர் கருணாரத்ன 28 ஓட்டங்கள், லகிரு திரிமன்னே 17 ஓட்டங்கள், மேத்யூஸ் 22 ஓட்டங்கள், தனஞ்செய டி சில்வா 1 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் நாள் முடிவில் பதும் நிசங்கா 26 ஓட்டங்களுடனும், அசலங்கா 1 ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி, இந்தியாவை விட 466 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.