பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் வங்கி கணக்கிலிருந்து முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்ட பணத்தை, பகுதி பகுதியாக செலுத்துவதற்கு, பிரதமரின் முன்னாள் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக கடமையாற்றிய உதித்த லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, அலரிமாளிகைக்கு அண்மையில் வருகைத் தந்த உதித்த லொக்குபண்டார, முதல்கட்டமாக 25 லட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளமை, விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த பணத்தை பகுதி பகுதியாக செலுத்த உதித்த லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வங்கி கணக்கிலிருந்து மாதாந்தம் 15 லட்சம் ரூபா விதம் உதித்த லொக்குபண்டார பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பெற்றுக்கொண்ட பணத்தை கொண்டு நண்பர்களுடன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளுதல், சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட மேலும் பல்வேறு விடயங்களை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.