“பசில் ராஜபக்சவை விரட்டும் முயற்சியில் சில நேரம் நாம் கொலை செய்யப்படலாம்.” – உதய கம்மன்பில

பசில் ராஜபக்ச அமெரிக்காவிற்கு திரும்புவம் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும், இது ஆரம்பம் மாத்திரமே, இதன் காரணமாக நான் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படலாம். சிறையில் அடைக்கப்படலாம், சில நேரம் கொலை செய்யப்படவும் கூடும். எம்மை கொலை செய்தாலும் எமது போராட்டத்தை அழிக்க இடமளிக்க மாட்டோம்.என்றும்  முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

இலங்கையின் தற்போதை நெருக்கடி நிலைமை தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“திட்டமிட்டு பொருளாதாரத்தை வீழ்ச்சியடை செய்யும் தந்திரம் காரணமாகவே தற்போது மக்கள் வரிசைகளில் நின்று கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இது ஏற்பட்ட நிலைமையல்ல. ஏற்படுத்தப்பட்ட நிலைமை.

இந்த நிலைமை ஏற்பட காரணமாக இருந்த பசில் ராஜபக்ச என்ற அழகற்ற அமெரிக்கர் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் வரை போராட்டத்தை நிறுத்த போவதில்லை. அவர் திரும்பிச் செல்லவில்லை என்றால் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு எதிராக உள்ளுக்குள் இருந்து நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இதற்கு எதிராக மக்களை அணித்திரட்டுவோம்.

 

டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் கூறியதன் காரணமாகவே டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனது அறிவிப்பால், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றால், மருந்து, சீமெந்து,இரும்பு, எரிவாயு, பால் மா, கோதுமை மா ஆகியவற்றுக்கு எப்படி தட்டுப்பாடு ஏற்பட்டது என நான் அந்த அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புகிறேன்.

எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒரே காரணம் டொலர் பற்றாக்குறையே. கையிருப்பில் இருந்த குறைந்த தொகையான அந்நிய செலாவணியை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய நிதியமைச்சர் தவறியதே டொலர் பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்தது. வேலை செய்ய தெரியாத பசிலின் இயலாமையை மறைக்க, எங்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகிறோம்” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *