ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சைக்கோ என விமர்சனம் செய்த ரஷ்ய நாட்டு மொடல் அழகி ஒருவர் சூட்கேஸில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர் கிரேட்டா வெட்லர் (23). இவர் மாடலிங் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மனநலம் பாதிக்கப்பட்டவர் என தனது சமூகவலைதள பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்து அவர் தனது போஸ்ட்டில் கூறுகையில் சிறுவயதில் புடின் நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார். அவரது உடல் வாகினால் அந்த அவமானங்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.
இதனால் அவர் சட்ட பள்ளியிலிருந்து வெளியேறி தேசிய பாதுகாப்பு முகாமை (கேஜிபி)யில் இணைந்தார். அத்தகைய குழந்தைகள் சிறுவயதிலிருந்தே அச்சம், பயம், சப்தம், அன்னியர்கள், இருட்டுக்கு பயப்படுவார்கள். எனவே எச்சரிக்கை, கட்டுப்பாட்டு மற்றும் தொடர்பு இல்லாமை போன்ற குணநலன்கள் அவர்களிடம் இருக்கும்.
அந்த வகையில் புடினுக்கு மனநோய் காணப்படுவதாக என்னால் யூகிக்க முடிகிறது என பதிவு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த பதிவு போட்டு ஒரு மாதம் கழித்து ரஷ்ய அழகி கிரேட்டாவை காணவில்லை. இதுகுறித்து அவரது நண்பர் இவ்ஜெனி பாஸ்டர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸார் தேடிய நிலையில்தான் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கிரெட்டாவின் முன்னாள் காதலர் டிமிட்ரி கொரோவின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் “நான்தான் கிரெட்டாவை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவளது சடலத்தை பெட்டிக்குள் அடைத்து வைத்தேன்” என ஒப்புக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரேட்டா இறந்தது தெரியக் கூடாது என்பதற்காக அவரது சமூகவலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்ததாகவும் டிமிட்ரி வாக்கு மூலம் அளித்துள்ளார். டிமிட்ரியை கைது செய்து சிறையில் அடைத்த ரஷ்ய போலீஸார் அவரிடம் அதிரடி விசாரணையை நடத்தி வருகிறார்கள்.