முரண்பாடுகள், படுகொலைகள், மரணங்கள் – சபாலிங்கம் முதல்… புலம்பெயர் இலக்கியச் சூழல்: பாகம் 33

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 33 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர் திரும்பவும் நாங்க அந்த புலம்பெயர் அரசியல் சூழல் பற்றி கதைப்பம். கிட்டத்தட்ட 92 இலிருந்து 30 ஆண்டுகள் புலம்பெயர் அரசியல்ல இருந்திருக்கீங்கள். இந்த அரசியல் சூழலில் பெரிய மாற்றங்கள் வந்துட்டு. 92 ல இருந்து 2010 மட்டுமான 20 ஆண்டுகள் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலகட்டம். புலிகள் கட்டுப்பாட்டில் தான் புலம் பெயர்ந்த தேசங்களும் இருந்தது. அதுக்கு பிறகு புலிகள் இல்லாத காலகட்டம். நாங்க அந்த முதல் காலகட்டத்தை பார்ப்போம். அந்தக் காலகட்டம் கூட புலிகள் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இங்கேயும் அரசியல் கருத்துக்களுக்கான சுதந்திரமின்மை ஒன்றும் இருந்தது. அதுகள பற்றி கொஞ்சம் சொல்லுங்க. ஏனென்டா நிறைய பேருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது எவ்வளவு தூரம் அபாயகரமானதாக இருந்தது?

அசோக்: 92 களில் புலிகளின் அதிகார ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. சுதந்திரம் அற்ற தன்மை தான். புலிகள் பற்றி எதுவும் வெளிப்படையாகப் பேசமுடியாத சூழல். எங்கும் எதிலும் புலிகள்தான். அவங்களின்ற உளவு வலைப்பின்னல், கொலைக்கரங்கள் இங்க எல்லா இடங்களிலும் வியாபித்துக் கொண்டிருந்த காலம் அது. சிறுபத்திரிகைகள் வெளியிட இயலாது. புலிகளின் இந்த கருத்துச் சுதந்திர மறுப்பு, அடாவடித்தனங்களுக்கு எதிராக வெளிவந்து கொண்டிருந்த புகலிட இலக்கிய சஞ்சிகைகளின் வருகையும் இக்காலங்களில் குறைந்துவிட்டது. புலிகளுக்கு எதிரான ஒரு குரலா ஒலித்துக்கொண்டிருந்தது அந்த நேரத்துல இலக்கியச் சந்திப்புகள் தான்.

தேசம்: அது யார் தொடங்கினது…? எப்படி தொடங்கியது…?

அசோக்: அது ஜெர்மன்ல தான் 1988ல் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. சிறுபத்திரிகை ஆசிரியர்கள் படைப்பாளிகளின், இலக்கிய ஆர்வலர்களின் ஒன்று கூடலாகத்தான் இந்த இலக்கிய சந்திப்பு ஆரம்பத்தில் இருந்ததென நினைக்கிறேன். ஜெயரெத்தினம் என்ற இலக்கிய ஆர்வலரின் முன் முயற்சியால் இச்சந்திப்பு தொடங்கப்பட்டது. இதில் தோழர்கள் சிறி ரங்கன், பரா, பார்த்தீபன், பாரதி, சுசிந்திரன், சந்தோஷ், வாணிதாசன், ராகவன், சிவராஜன் போன்றவங்க முக்கியமானவர்களாக இருந்திருக்கிறாங்க. உண்மையில் இந்த இலக்கிய சந்திப்பின் வரலாற்றை சொல்லக்கூடியவர்கள் இவங்கதான். அது காலத்துக்கு காலம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

தேசம்: அது எப்ப பாரிசுக்கு மாறுது…

அசோக்: 92 பாரிசில் நடந்த சந்திப்பில் தான் நான் முதலாவதாக கலந்து கொள்ளுறன். அந்த இலக்கிய சந்திப்பை பொறுப்பெடுத்து பாரிசில் நடத்தியவர்கள் கலைச்செல்வன், லஷ்மி, புஸ்பராஜா, சபாலிங்கம் போன்ற தோழர்கள்தான்.

நிறைய அரசியல் இலக்கியம் சார்ந்த நண்பர்களின் தொடர்வும் அறிமுகமும் இந்த இலக்கிய சந்திப்பில்தான் ஏற்படுகிறது. சபாலிங்கம் 94 மே யில புலிகளால படுகொலை செய்யப்படுகிறார்.

தேசம்: சபாலிங்கத்தை ஏன் புலிகள் கொலை செய்கிறார்கள்…?

அசோக்: சபாலிங்கம் ஆரம்ப காலத்திலேயே விடுதலைப் புலிகளோடு நெருக்கமான உறவில் இருந்தவர். இலங்கையில் மாணவர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவர். ஒரு தடவை பிரபாகரன் காயப்பட்ட போது சபாலிங்கம் தான் அவரை காப்பாற்றி எல்லா உதவியும் செய்தவர்.

தேசம்: இலங்கையிலயோ…?

அசோக்: ஓம் இலங்கைல. அந்த காலகட்டத்தில் பிரபாகரனுக்கும் சபாலிங்கத்திற்கும் நெருங்கிய உறவு இருந்திருக்கிறது. அப்ப பிரபாகரனோட பலமும் பலவீனமும் சபாலிங்கத்துக்கு தெரியும். அவர் ஆவண சேகரிப்பாளர். அத்தோட அகதி தஞ்சம் கோருகின்றவர்களூக்கு உதவிகள் செய்றது. மனித உரிமைவாதி அவர். மனித உரிமைவாதி என்றால் புலிகளுக்கு சார்பாக இருக்க முடியாதுதானே. அப்ப விடுதலைப் புலிகளுக்கும் அவருக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தது. அந்த நேரத்தில் அவர் தன்னைப்பற்றி ஒரு பயோகிராபி எழுத வெளிக்கிட்டவர். அவர் துணிந்தவர் நேரடியா ஓபனா கதைப்பார். அவர் பிரபாகரனை பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக வைத்துக்கொண்டிருந்தவர்.

பரிஸ் இலக்கியச் சந்திப்புக்கு பிறகு சுவிஸ்ல இலக்கியச் சந்திப்பு நடந்தது. அதுல சபாலிங்கம், புஸ்பராஜா, கலைச்செல்வன், லச்சுமி எல்லாம் கலந்து கொள்கிறாங்க. அங்க நடந்த உரையாடலின் போது சபாலிங்கம் புலிகள் தொடர்பிலான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அது எப்படியோ புலிகளுக்கு…,

தேசம் : பொறுங்கோ இது தனிப்பட்டமுறையில நடந்ததா…?

அசோக்: இல்லை. இது இலக்கிய சந்திப்பில் நடந்தது.

தேசம்: தனிய புலிகள் மீது மட்டும் வச்சாதான் இல்ல பிரபாகரன் மீதும் அந்த விமர்சனத்தை வச்சாரா…?

அசோக்: புலிகள் வேற – பிரபாகரன் வேற இல்ல தானே. அந்த விமர்சனங்கள் ரெண்டுபேரையும் நோக்கி தான் போயிருக்கும். அது வந்து நான் நினைக்கிறேன், இவர் பயோகிராபி எழுதுற கதை வந்த காலகட்டங்களில் இவருடைய இந்த விமர்சனங்களும் அவங்களுக்கு ஒரு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அதுக்குப் பிறகுதான் இந்த படுகொலை நடந்தது.

தேசம்: அப்ப இந்த குறிப்பிட்ட சம்பவம் – குறிப்பிட்ட நிகழ்ச்சி தான் இதற்கு பிரதான காரணமாக இருந்தது…?

அசோக்: அந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுதல். ஆனா அவர் நீண்ட காலமாகவே புலிகளுக்கு எதிரானவராக புலிகளின் மனித உரிமைமீறல்கள், படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்கள் அவருக்கு இருந்தது.

தேசம்: அப்போ அவர் எழுதியிருக்கிறார் நிறைய ஏற்கனவே…?

அசோக்: அவர் எழுதியது குறைவு. அது சம்பந்தமான டொக்கியூமென்ற்ஸ் எல்லாம் சேமித்து வைத்திருந்தார். புலிகளுடைய படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் சேர்த்துக் கொண்டிருந்தவர். அடுத்தது புலிகள் மாத்திரமல்ல, புதியதோர் உலகம் இருக்குதானே. புளொட்ல நடந்த படுகொலைகள் தொடர்பாக கோவிந்தன் என்ற பெயரில் தோழர் கேசவன் எழுதின புத்தகம், அதைக் கூட இங்க ரீ பிரின்ட் போட்டவர். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்களை எல்லாம் அவர் சேர்த்தவர். அவர் புலிகளுக்கு எதிரா மாத்திரமில்லை அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகவும் இருந்தவர். கூடுதலா அந்த நேரத்தில் புலிகள் அதிக படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால அவருடைய கவனம் அவர்கள் மீது போனது.

தேசம்: அவருடைய கொலை வந்து எவ்வளவு பெரிய தாக்கத்தை புலம்பெயர் தேசங்களில் ஏற்படுத்தியிருந்தது..?
அசோக்: அது ஜெயபாலன், நிறைய பேரை பயமுறுத்தி போட்டுது.

தேசம்: சபாலிங்கம் படுகொலை தான் முதன்முதலில் இலங்கை, இந்தியாவுக்கு வெளியே நடந்த முதல் படுகொலை என நினைக்கிறேன்.

அசோக்: ஓம் புலம்பெயர் தேசத்தில் நடந்த முதல் படுகொலை. அந்தப் படுகொலைக்கு பிறகு சுதந்திரமா பேசுற தொணி எல்லாம் ஆட்களுட்ட குறைஞ்சு போய்விட்டது. ஏன் சபாலிங்கம் செத்தவுடனயே துண்டுப்பிரசுரம் வெளியிடுவதற்கு கூட யாருமே முன்வரவில்லை தானே. அந்த நேரம் மனிதம் குரூப் இருந்தது சுவிஸ்ல, அவங்க தான் முதன்முதலில் சபாலிங்கம் படுகொலை பற்றி கடுமையான அறிக்கை விட்டவங்க. அது மாதிரி இங்க பாரிசில் நாங்க ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தனாங்க. அந்த அறிக்கைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்க ஆக்கள் எவருமே வரவில்லை. பயம் நிறைய பேருக்கு. கடைசியில் நானும், இப்ப லண்டன்ல இருக்க நாவலனும் தான் வினியோகித்தம். அப்படியான நெருக்கடிதான் இருந்தது. அதுக்குப் பிறகு நாங்கள் சபாலிங்கம் காலமாகி ஒரு மாதத்தில் அஞ்சலிக் கூட்டம் நடாத்தினோம். அஞ்சலி கூட்டத்துக்கு வருவதா நிறைய பேர் சொன்னவங்கள். எதிர்பார்த்த அளவுக்கு யாருமே வரல. பேசுவதா ஒப்புக்கொண்ட ஆக்கலும் கூட வரல. கடைசியா நானும் தோழர் அழகிரி, சுகன், யோகராஜா நாங்க தான் பேசினது. நான் நினைக்கிறேன் ஒரு 15 பேர் தான் வந்திருப்பாங்க. அதுவும் பயந்து பயந்து வந்தவங்க. யாருமே வரல. அப்படி ஒரு பயத்தை அது கொடுத்திருந்தது.

தேசம்: இந்தக் கொலை சம்பந்தமாக யாராவது கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்ததா…?

அசோக்: அந்த வழக்கில் யாருமே கைது செய்யப்படவில்லை. வெளி நாட்டவர்கள், அகதிகள் மத்தியில் இதுபோன்ற படுகொலைகள் நடந்தால் இந்த அரசுகள் பெரிய கவனம் கொள்ளாது. தங்களுக்கு பாதிப்பு வந்தால் மட்டும்தான் கவனம் கொள்ளுவாங்க.

தேசம்: பிரித்தானியாவிலும் அப்படியான சம்பவங்கள் நடக்கிறதுக்கான வாய்ப்புகள் …

அசோக்: ஓம். குறைவு.

தேசம்: குறைவு எண்டில்ல அப்படி நடந்திருந்தால் கைதுசெய்யப்பட்டு இருப்பாங்க. தப்பி போவதற்கான வாய்ப்பு இல்லை. பிரான்சுல இத கண்டும் காணாம விடுறது. தங்களுக்குள் மோதிக் கொண்டு போகட்டும் என்று…

அசோக்: ஓம். அவங்களைப் பொறுத்தவரை தங்கள் சமூகததை, தங்கள் சட்டம் பாதுகாப்பை பாதித்தால், தங்களோட அரச நிர்வாகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பாங்க. அதுவரை அது அவங்களுக்கு வெளிநாட்டார் பிரச்சனைதான். அது எங்க சமூகத்தோட பிரச்சனை. எத்தனை படு கொலைகள் நடந்தது. ஒரு தடவை யோகராஜா என்ற தோழரை புலிகள் தாக்கினாங்க. அவர் EPRLF தோழர். அவரும் நானும், நாவலனும் போய் பொலிசில் முறையிட்டோம். பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவங்களைப் பொறுத்தவரை இது தங்கட பிரச்சனை அல்ல. வெளிநாட்டார் பிரச்சனை. இப்படி பல சம்பவங்கள்…

தேசம்: அதனாலதான் புலிகளுடைய படுகொலை கடைசியானதுமில்ல. தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது.

அசோக்: ஓம்.

தேசம்: பாரிஸில் தான் கூடுதலான படுகொலைகள் நடந்தது. நாதன் படுகொலை …

அசோக்: ஓம். புலிகளுடைய படுகொலைகள் எல்லாம் வந்து, அரசுகள் பெருசா கவனத்தில் எடுத்து எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல. அது அவங்களுக்கு சாதகமா போய்விட்டது. அடுத்தது ஆட்களைக் கடத்திக் கொண்டு போய் அடிக்கிறது தொடர்பான பிரச்சனைகளும் இருந்தது தானே. இங்க மாத்திரம் இல்லை, அதை எல்லா இடங்களையும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தேசம்: அடிக்கிறது நடந்திருக்கிறது. ஆனா கொலை அளவுக்கு மற்ற நாடுகளில் போகல.

அசோக்: அந்த சூழல் பெரிய மோசமான ஒரு சூழல் தான். அதுக்குப் பிறகுதான் சிறு சஞ்சிகைகள் வெளியிடுவதற்கான தயக்கம் நிறைய பேர்கிட்ட வந்தது.

தேசம்: அப்படியிருந்தாலும் பரிஸில நிறைய இலக்கிய ஈடுபாடு நடந்தது. அந்த நேரம் ஒரு காலகட்டம் வரைக்கும் – நான் நினைக்கிறேன் 2007 வரைக்கும் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு மையமாக பரிஸ் இருந்தது என்டு.

அசோக்: ஓம் ஆரம்பத்தில் மனோ ‘ஓசை’ சஞ்சிகையை வெளியிட்டவர். நான் வந்து முதன்முதல்ல அவருடைய சஞ்சிகையில தான் துடைப்பான் என்ற பெயரில் எழுதினனான். ஒரு இலக்கிய உறவு அவரோட தான் ஏற்பட்டது. ஓசை சஞ்சிகைக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி வந்தபோது தோழர் சபாலிங்கம்தான் உதவினவர். சபாலிங்கம் படுகொலைக்கு பிறகு ஓசை வெளிவரவில்லை. பிறகு மனோ ‘அம்மா’ என்றொரு சஞ்சிகை கொண்டு வந்தவர்.

தேசம்: அம்மாவுல தான்; நீங்க சேனன்…?

அசோக்: சேனன், வின்சென்ட் ரபேல் பலரும் எழுதினாங்க. நான் எழுதல்ல. அது சிறு கதைகளுக்காக கொண்டுவரப்பட்ட சஞ்சிகை. சபாலிங்கத்தின் படுகொலை அரசியல் எழுத்துக்களை கொண்டு வரும் பயத்தை கொடுத்து விட்டது.

தேசம்: அது 2000க்கு முன்பே வந்துட்டுதா…?

அசோக்: ஓம் வந்துட்டுது. அதோட அரவிந்தன், முகுந்தன், எல்லாருமாக சேர்ந்து ‘மௌனம்’ என்ற சஞ்சிகையை வெளியிட்டாங்க.

பிறகு ‘எக்ஸில்’ வந்தது. லட்சுமி, கலைச் செல்வன், ஞானம், விஜி, கிருஸ்ணராஜா ஆட்கள் சேர்ந்து இந்த சஞ்சிகையை கொண்டு வந்தாங்க. பிறகு அதுல முரண்பாடுகள் ஏற்பட்டு பிரிந்து, அதுக்கு பிறகு லட்சுமி கலைச்செல்வன் ‘உயிர் நிழல்’ என்ற சஞ்சிகையை கொண்டு வராங்க. பரிஸ் வந்து ஒரு அரசியல் இலக்கிய மையமாக இருந்தது.

தேசம்: 2007-2010 பரிஸ் ஒரு முக்கிய மையமாகத் தான் இருந்தது.

அதே நேரம் பரிஸ் ஒரு இலக்கிய அரசியல் முரண்பாட்டின் மையமாகவும் இருந்தது.

அசோக்: ஓம்… ஏனென்றால் இங்க வந்து அரசியல் இலக்கிய பிரக்ஞை உள்ள ஆட்கள் நிறைய பேர் இருந்தாங்கள். புலிகளோட நெருக்கடி இருந்த அந்த காலங்களில் எங்களுக்குள்ள அதற்கெதிரான ஒரு உத்வேகம் ஒற்றுமை இருந்தது. அதே நேரம் நீங்க சொல்வதுபோல் எங்களுக்குள்ளும் முரண்பாடுகள் இருந்தன.

தேசம்: புலிகளுடைய காலத்தில் புலிகளின் இந்த செயற்பாடுகள். உங்களுக்கு ஒரு ஊக்க சக்தியாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.?

அசோக்: புலிகளுடைய அடக்குமுறை என்பது ஐரோப்பிய நாடுகளில் எல்லா இடங்களிலும் பரவித்தானே இருந்தது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தானே… அதற்கு எதிரான பிரச்சாரங்களை செயற்பாடுகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்தோம். இன்று புலி எதிர்ப்பு பேசுகிற பலரை அந்தக் காலத்தில் நான் கண்டதே இல்லை. 2009க்கு பிறகு நிறைய புலி எதிர்ப்பாளர்களை சந்திக்கிறன். இப்போ பேசுறது பிழை இல்ல. ஆனா அந்தக் காலத்துல அவங்களோட குரல் புலிகளுக்கு எதிராக ஒலிக்கவில்லை.

தேசம்: ஒலிக்க வேண்டிய காலத்தில் அது ஒலிக்கல்ல. ஒரு சந்தர்ப்பவாதமா தான் பார்க்க வேண்டியிருக்கு.

அசோக்: ஓம்.

தேசம்: அப்படி யாரைப் பார்க்கிறீர்கள் நீங்கள்…?

அசோக்: பெயர்கள் வேண்டாம். நிறைய பேர் இருக்கிறார்கள் அப்படி.

அந்த நேரத்தில கலைச்செல்வனும் நண்பர்களும் சேர்ந்து பள்ளம் என்றொரு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டாங்க. இதற்காக புலிகள் கலைச் செல்வனைக் கடத்தி சென்று சித்திரவதை செய்தாங்க. இப்படி புலிகளின் வன்முறைக்கலாச்சாரம் இங்க இருந்தது.

தேசம்: கலைச்செல்வன் உங்களுடைய நெருங்கிய நண்பர்.

கலைச்செல்வன் எனக்கு மாத்திரம் அல்ல பலருக்கும் நெருங்கிய நண்பனாக இருந்தவர். உதவும் குணத்திற்கும், ஆபத்தில் உதவுவதற்கும் உதாரணம் காட்டமுடியும் என்றால் அது கலைச்செல்வனாகத்தான் இருக்கமுடியும். நிறைய தோழர்களிடையே நல்ல உறவு இருந்தது. ஒரு காலகட்டத்தில் மிக தீவிரமாக எல்லோரும் வேலை செய்தார்கள். அவர்களுடைய அந்த அராஜகங்களுக்கு எதிரான குரலையும் நடவடிக்கையும் நாங்கள் மறுக்க இயலாது.

தேசம்: அதை யாரும் மறுப்பதற்கில்லை.

அசோக்: அடுத்தது புஸ்பராஜா தோழர். எல்லாருக்கும் ஊக்கமாக இருந்தவர் அவர் சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் மிக நெருக்கமாக இருந்தவரும் அவர்தான்.

தேசம்: மற்றது அவருடைய ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற வரலாற்று நூலும் மிக முக்கியமானது. அதுல பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அதை ஆவணப்படுத்தி நூலாக கொண்டு வந்தது ஒரு முக்கியமான விஷயம்.

அசோக்: அடுத்தது புஸ்பராஜா தோழர் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் இருந்தவர்.

தேசம்: அரசியல் இலக்கிய தளங்களில் பரா மாஸ்டரின் பங்களிப்பும் முக்கியானது.

அசோக்: தோழர் பரா குடும்ப உறுப்பினர்கள் முழுப்பேருமே அரசியல் இலக்கிய மற்ற மனித உரிமை விடயங்களில் நிறைய செயற்பட்டாங்க. மல்லிகா, உமா, சந்தோஸ் எல்லாரும். இவங்க சிறு சஞ்சிகை ஒன்றைக் கூட வெளியிட்டாங்க. ‘சிந்தனை’ என்று பெயர்.

பாரா தோழருக்கு நீண்ட அரசியல் வரலாறு உண்டு. இலங்கையில் இடதுசாரி தொழிற்சங்கங்களை உருவாக்கியதில், அதனை முன்னெடுத்ததில் பரா தோழருக்கு நிறைய பங்குண்டு. அந்த வரலாறுகளெல்லாம் பதிவு செய்யப்படவேண்டியது. நானும் ஜெகாவும் பரா தோழரின் அனுபவங்களை ஒளிப்பதிவு செய்தோம். எழுத்தில் கொண்டு வரமுடியல்ல. சுவிஸ்ல ‘மனிதம்’ என்றெரு சஞ்சிகை நீண்ட காலம் வெளிவந்தது. அவங்க அமைப்பு வடிவத்தில் இயங்கினாங்க. ‘மனிதம்’ குரூப்புக்கு வரலாறு ஒன்று இருக்கு. ஒரு காலகட்டத்தில் பரிஸ் மாதிரி, சுவிஸிலையும் மிக மோசமான நெருக்கடியை புலிகள் கொடுத்தார்கள். அதற்கு எதிராக மனிதம் குரூப் நிறைய வேலை செய்தது. அந்த நண்பர்கள் துணிந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள். ஜே ர்மனியில் தான் நிறைய சிறு சஞ்சிகைகள் வெளிவந்தன. பார்த்தீபன் ஆட்கள் ‘தூண்டில்’ என்றும், நிருபா ‘ஊதா’ என்றும், பாரதி ஆட்களும் ஒரு சஞ்சிகை வெளியிட்டாங்க. நான் இங்கு வருவதற்கு முன்னர் 80களின் கடைசி வரை நிறைய சிறுசஞ்சிகைகள் வெளிவந்திருக்கின்றன. எப்படியும் சுமார் 25 சஞ்சிகைகள் வெளி வந்திருக்கும் என நினைக்கிறன். அந்தளவிற்கு இலக்கிய சூழல் இருந்தது.

தேசம்: உங்களை பொறுத்த வரைக்கும் நீங்கள் பாரிஸில் வாழ்ந்தாலும் கலை இலக்கியச் சூழலை பொருத்த வரைக்கும் நீங்கள் எல்லைகளை கடந்து தான் வேலை செய்தீர்கள்.

அசோக்: இங்க வந்த பின் நிறைய தொடர்புகள் இருந்தது. Human Rights Watch என்ற மனித உரிமை அமைப்புடனும் உறவு இருந்தபடியால் அதன் ஆங்கில, தமிழ் பிரசுரங்களை யூரோப் ஃபுல்லா நாங்கள் விநியோகித்திருக்கிறோம். அந்த நேரம் நான் வேலை செய்ததை விட இதற்குப் பின்னால் அலைந்ததுதான் கூட. இதனால் நிறைய வேலைகளை இழந்திருக்கிறேன். தெரியும் தானே வேலைக்கு போனால் ஒழுங்காக வேலைக்கு போக வேண்டும். ஒருநாள் போகாவிட்டாலும் பிரச்சனை. நான் இப்படி ஜெர்மன், பெர்லின் போனேன் என்று சொன்னா இங்க வேலை போய்விடும்.

அடுத்தது தோழர் உமாகாந்தன். அவரும் இறந்து போய்விட்டார். அவரும் முக்கியமானவர். கட்டாயம் நிறைய பெயர்களை குறிப்பிட வேண்டும். ஆனால் பெயர்கள் உடனடியா ஞாபகம் இப்ப வரவில்லை. இந்த பெயர்களையெல்லாம் பதிவு செய்யவேண்டும். அடுத்தது நாங்கள் ‘நண்பர்கள் வட்டம்’ ஒன்றை இங்கு வைத்திருந்தோம். அந்த நண்பர்கள் வட்டத்துக்கு ஊடாக நிறைய வேலை செய்திருக்கிறம். நிறைய சந்திப்புகளை, கலந்துரையாடல்களை செய்திருக்கிறம். நிறைய புத்தக வெளியீடுகளை குறும்பட நிகழ்வுகளை புகைப்பட கண்காட்சி எல்லாம் செய்திருக்கிறம். நண்பர்கள் வட்டத்தில கலைச்செல்வன், லஷ்மி, அசோக் பிரகாஷ், கிருபன், மோகன், வன்னியசிங்கம், பிரதீபன், உதயகுமார் என்று நிறைய நண்பர்கள் இருந்தாங்க.

தேசம்: மற்றது நீங்கள் ‘அசை’ என்று ஒரு சஞ்சிகை கொண்டு வந்தீங்க அல்லவா?

அசோக்: அது மூன்று இதழ் வந்தது. அது ஒரு அரசியல் கோட்பாட்டுசஞ்சிகை. தொடர்ச்சியாக கொண்டுவரமுடியல்ல.

தேசம்: மற்றது இங்கே இருந்து அரசியல் கலை இலக்கியத்துடன் ஈடுபட்டவர்கள் கனடா வேறு நாடுகளுக்கும் போயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அசோக்: இங்கே இருந்து நிறைய பேர் போயிருக்கிறார்கள். வின்சென்ட் ரபேல், சேனன், கற்சுறா…

தேசம்: சேனன் லண்டனில் இருக்கிறார். கற்சுறா …

அசோக்: கற்சுறா, வின்சென்ட் ரபேல் கனடாவில் இருக்கிறாங்க. அவர் நிறைய திறமைசாலி. மொழியியல் தொடர்பாக மிக புலமைகொண்டவர். கற்சுறா இங்க இருக்கும் போது தேவி கணேசன் என்ற பெயரில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். நல்ல சிறந்த கவிஞராக வரவேண்டியவர். சேனனின் இன்றைய அரசியல் வளர்ச்சியும் செயற்பாடும் முக்கியமானது. அவர் பாரிசில் இருந்திருந்தால் சோபாசக்தியோடு சேர்ந்து தன் அரசியலை அழித்திருப்பார். தப்பிவிட்டார்…

ஜெர்மனியில் சுசீந்திரன், பாரதி, சிறிரங்கன், பார்த்தீபன், சிவபாலன் என்று நிறைய. பார்த்தீபன் தூண்டில் என்றொரு சஞ்சிகையை வெளியிட்டவர். மற்றது பெண்கள் தொடர்பான நிறைய சந்திப்புகள் நடந்தது. இலக்கிய சந்திப்பு மாதிரி ‘பெண்கள் சந்திப்பு’ ம் இருந்தது. அதுல நிறைய பெண்கள் கலந்து கொண்டார்கள். இதுவும் ஜெர்மனியில் தான் 1990 இல் உருவானது. ஆரம்பத்தில் இதனுடைய முன்னணி செயற்பாட்டாளராக தேவிகா கங்காதரன் இருந்தாங்க என நினைக்கிறன். பிறகு தொடர்ச்சியான செயற்பாட்டில் நிருபா, உமா, இன்பா, ரஞ்சினி, மல்லிகா, தேவா …

தேசம்: லண்டனில் ராஜேஸ் பாலா…

அசோக்: ஓம். ராஜேஷ் பாலாவும் அதில் இருந்தாங்க. பிரான்சிலிருந்து லக்சுமி, சுவிசிலிருந்து ரஞ்சி, நோர்வேயிலிருந்து தயாநிதி போன்றவங்க முக்கியமானவங்களாக அதனோடு செயற்பட்டாங்க. தயாநிதி அந்த நேரத்தில காத்திரமான பெண்ணிய கோட்பாட்டு சஞ்சிகை ஒன்றை கொண்டு வந்தாங்க. சக்தி என்று பெயர். காலப்போக்கில் இலக்கிய சந்திப்பிலும், பெண்கள் சந்திப்பிலும் முரண்பாடு வந்தது என்பது இன்னுமொரு வரலாறு. ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான செயற்பாடுகளில் பெண்கள் சந்திப்பும், இலக்கிய சந்திப்பும் இருந்தது.

தேசம்: அடுத்தது பரிஸ் அரசியல் இலக்கியத்துக்கான களம். தலித் முன்னணியின் உருவாக்கம் ரஜாகரனுடைய கட்சியின் உருவாக்கம்.

அசோக்: நான் இங்க வந்ததும் ரஜாகரனுடன் தான் உறவு ஏற்பட்டது.

தேசம்: உறவுகளும் அதைத் தொடர்ந்து முரண்பாடுகளும்,,,

அசோக்: ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தொடர்பான பிரச்சனைகளிளால் இந்த முரண்பாடு வருகின்றது. அவர் ஜனநாயக உரையாடலுக்கான ஆளில்லை. தன்னுடைய கருத்துக்குக்கும் ஆளுமைக்கும் உட்பட்டு நாங்க இருந்தா அவருக்கு அது ஓகே. எந்த பிரச்சனையும் இல்லை. ஹட்டன் நெசனல் வங்கி கொள்ளை தொடர்பாக கேள்வி கேட்கத் தொடங்கித்தான் இந்த முரண்பாடுகள் வந்தது.

தேசம்: அவருடைய மொழியும் ஒரு ஆணாதிக்க மொழிதான்.

அசோக்: ஆனால் தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு நல்லவர். உபசரிப்பது, உதவி செய்வது. நான் வந்த பொழுது மிக நெருக்கடியான பொருளாதார நிலையில் நான் வீடு எடுப்பதற்கு அட்வான்ஸ் தந்ததே அவர்தான். பிறகு ஆரம்ப காலத்தில் எனக்கு ஒரு கேமரா வாங்கி தந்தார். எல்லாப்பணமும் கொடுத்து விட்டேன். நல்ல உபசரிப்பு செய்வார். ஆனால் அவருடைய தவறுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கேள்விகள் கேட்டால் பிரச்சனை.

தேசம்: ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் பிரச்சினையில்லை…

அசோக்: ஒரு காலகட்டத்தில் மிக நெருக்கமான நண்பர்களாக தான் நாங்கள் இருந்தோம். இப்படி அரசியல் முரண்பாட்டுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் பார்த்தோம் என்றால் மிக அன்பான ஆட்களாக இருப்பார்கள். கஷ்டத்தில் உதவி செய்கிற தன்மை எல்லாம் இருக்கும். ஆனால் நிபந்தனை அடிப்படையில் தான் அது அமையும் அது கஷ்டம் எங்களுக்கு.

தேசம்: அதே மாதிரி தலித் முன்னணியுடன் உங்களுக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தது என்று நினைக்கிறேன்…

அசோக்: ஓம். தலித் முன்னணியினர் எனக்கு முதலே நண்பர்கள். தேவதாஸ், அசுரா என்கிற நாதன்.

தேசம்: ஏன் அந்த முரண்பாடு உங்களுக்கு தலித் முன்னணி உடைய ஏற்படுகிறது? என்ன பிரச்சினை அது?

அசோக்: தலித் முன்னணியுடன் இலங்கை அரசியல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுதான். விடுதலைப் புலிகள் மீது எத்தகைய கடும் விமர்சனம் வைத்திருக்கிறனோ, அதைவிட மிகக் கடுமையான விமர்சனம் இலங்கை அரசு மீதும் எனக்கு இருக்கு. பேரினவாத அரசு ஒடுக்குமுறைகளை புறம்தள்ளி விட்டு, புலிகள்தான் எங்கள் எதிரி என்று சொல்லிக் கொண்டிருக்கமுடியாது. அப்போ இரண்டையும் நாங்கள் எதிர்க்க வேண்டும். புலிகளை எதிர்க்கிற அந்நேரம், பேரினவாத அரசையும் எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு என்னிடம் இருக்கிறது.

2009க்கு பிற்பாடு தான் என்னுடைய நிறைய தோழர்களுடன் முரண்பாடு வருது. அதுவரையில் மிக தீவிரமாக புலி எதிர்ப்பாளர்களாக, அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாக சொல்லிக்கொண்ட நாங்கள், புலிகள் அழிக்கப்பட்ட உடனேயே இன்னாரு ஒடுக்குமுறையாளனான இலங்கை பேரினவாத அரசோடு இணைகிறோம். அதனை ஆதரிக்கிறம் .நியாயப்படுத்துறம்.

விமர்சன பூர்வமான கண்ணோட்டத்தோடு மக்களின் நன்மைக்காக நாங்கள் இலங்கை அரசோடு பேசலாம். அந்த வகையில் நீங்கள் மக்களின் நன்மைக்காக மக்களின் விடுதலைக்காக பேசுவது தவறு இல்லை. ஏனென்றால் நீங்கள் உரிமை பற்றி பேச வேண்டும் என்றால் உடன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால் அந்த அரசுடன் தான் பேச வேண்டும். ஆனால் அவங்க தனிப்பட்ட நலன்களுக்காக போய்ச் சேருகிறார்கள் ஆதரிக்கின்றார்கள் . அதை என்னால் சகிக்க முடியாமல் போய்விட்டது. வர்க்கத்தாலும், சாதித்தாலும் ஒடுக்கப்பட்ட எங்கட மக்களின் விடுதலை உரிமை பற்றி பேசுவதுதான் தலித்திய அரசியல். ஆனால் இவங்க ஒடுக்குமுறையாளர்களுடன் தனிப்பட்ட சுயநலன்களுக்காக கைகோர்க்கிறாங்க.

தேசம்: பொதுவாக பாரிஸ் இலக்கியத் தளம், அரசியல் தளம் போன்றவற்றில் பேசப்பட்ட மிகக் கூர்மையான முரண்பாடு என்டு நினைக்கிறேன். ஞானம் அவர்களுடனான முரண்பாடு. அது எப்படி..? அது வந்து அவர் இருக்கிற அரசியல் நிலைக்காக அல்ல. அதுக்கு முதலே அந்த முரண்பாடு வந்துட்டு என்டு நினைக்குறேன்.

அசோக்: ஞானம் பற்றி முன்னர் கதைத்திருக்கிறன் என நினைக்கிறன். நான் பாரிசிக்கு வந்த புதிதில் எனக்கு உதவி செய்ததில் முக்கியமானவர் ஞானம்.

தேசம்: அவர் மட்டக்களப்புகாரர் தானே…?

அசோக்: நாங்க ஒரே கிராமத்தை அதாவது களுதாவளை கிராமத்தை சேர்ந்தவங்க. புளொட் மாணவர் அமைப்பில் வேலை செய்தவர். மிகவும் நல்லவர். நல்ல திறமைசாலி. நல்ல ஆற்றலும் திறமையும் உள்ளவர். இங்க பாரிசிக்கு வந்த போது அவர் செய்த உதவிகளை மறக்கமுடியாது. இதுபற்றி முன்னர் சொல்லி உள்ளேன். இதில ஒரு பெரிய சிக்கல் என்னென்டு கேட்டால், வெறும் புலி எதிர்ப்பு என்று சொல்லி சொல்லி இலங்கை அரசோடு அதன் ஆதரவு சக்திகளோடு இணைய முடியாது. போய் சேர ஏலாது. அத்தோட புலிகளிலிருந்து கொண்டு எங்கட மக்களையும் தோழர்களையும் நண்பர்களையும் கொடுரமாக கொன்றொழித்துவிட்டு புலிகளோடு இருந்த காலத்தில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து விட்டு அதிகாரப் போட்டியால் தனிப்பட்டமுரண்பாடுகளினால் வெளியேறி விட்டு புலிகளை எதிர்க்கின்ற எந்த பேர்வழிகளையும் நான் நம்புவதில்லை.

புலிகள்ல மேல்மட்டங்கள்ல வேலைசெய்தவங்கள் இருக்காங்கள் தானே… நான் இவங்களை எப்போதும் எப்போதுமே நம்புறது இல்ல. புலிகளோட மனோநிலை என்டுறதுல ஒரு உளவியல் கட்டமைப்பு இருக்கும். அவங்கள் இயல்பாகவே அந்த உளவியல் கட்டமைப்பால் வடிவமைக்கப்பட்டிருப்பாங்க. அவங்களிட்ட ஜனநாயக பண்பாடே இருக்காது. ஜனநாயக அமைப்புக்களுக்கு எதிராக இருப்பாங்கள். புலிகள எதிர்க்கின்ற இன்னோரு புலிகளாதான் இருப்பாங்கள். அப்படி தான் நான் பிள்ளையானையும் , கருணாவையும் பார்க்குறன். அப்ப ஞானம் போன்ற ஆட்களின் இணைவு என்டது பலத்த அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் கொடுத்தது.

நீங்கள் ஒரு இடதுசாரிய முற்போக்கு சிந்தனைகளுடன் வளர்ந்தவர்கள் – பேசுபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் கருணாவோடயும் பிறகு பிள்ளையானோடயும் – எந்த அடிப்படையில எப்பிடி வேலைசெய்வீங்கள். விடுதலைப் புலிகள் என்ற சொல்லாடலே ரத்தவாடை அடிப்பது. பிள்ளையான் கட்சியின் பெயரைப் பாருங்கள். தமிழ் மக்கள் வடுதலைப் புலிகள் . அதே ரத்தவாடை அடிக்கும் சொல்லாடல். இவர்கள் வன்னிப் புலிகளை எதிர்த்தார்களே தவிர எண்ணமும் செயலும் மனக் கட்டமைப்பும் புலி அரசியலைக் கொண்டதுதான்.

புலிகள் பிற்போக்குத்தனமான அரசியலை கொண்டு தமிழ்தேசிய வாதத்தை அணுகினாங்க. அதன் விளைவுகளை நாங்க பார்த்தோம் அனுபவித்தோம். இதே அரசியலை பிற்போக்கு அரசியலை கொண்டு பிள்ளையான் கட்சியினர் பிரதேசவாத அரசியலை கட்டமைக்கிறாங்க. எப்போதுமே தேசியவாதம், பிரதேச வாதம் போன்ற அடையாள அரசியல்கள் பிற்போக்குத்தனமான சிந்தனைகளையும் சுய நல பிழைப்பு வாதத்தையும் கொண்டவங்க கையில் அகப்படும் போது அது ஆபத்தான விளைவுகளைதான் கொடுக்கும். இவ்வாறான பிற்போக்குத்தன அரசியலை வைத்து அரசியல்வாதிகளும், அவர்களை அண்டிப்பிழைப்பவர்களும் வாழ்வாங்க. ஆனா பாதிக்கப்படுவது அப்பாவி மக்களும், இளம் தலைமுறையும்தான். இத நாங்க மட்டக்களப்பு பிரதேசத்தில பார்க்க முடியும். இதனால்தான் ஞானம் தொடர்பாக முரண்பாடுகள் எனக்கு வருகிறது.

தேசம்: உங்களுக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடு அதுக்குப் பிறகுதான் வருதா…?

அசோக்: இல்லை இல்லை இதற்கு முதலே முரண்பாடு தொடங்கி விட்டது. இப்ப கருத்தியல் சார்ந்து மிகத் தீவிரமானது இந்த கருணா பிள்ளையானோடு சேர்ந்த பிறகுதான். இதற்கு முதல் எப்படி இந்த முரண்பாடு தொடங்குது என்றால் ‘எக்சில்’ என்றொரு சஞ்சிகையை கலைச்செல்வன், லக்சுமி, ஞானம், விஜி, கிருஸ்ணராஜா, கற்சுறா இவங்கள் எல்லாருமா சேர்ந்து வெளியிடுறாங்க. அந்தக் காலகட்டத்தில் நானும் இங்க பாரிசில் இருந்தேன். இவர்களின் இந்த ஒருங்கிணைவு, சஞ்சிகை வெளியீடு தொடர்பாக எனக்கு சில சிக்கல்கள் இருந்தது. ஏனென்றால் உண்மையில் கருத்தியல் சார்ந்து ஒன்றுபட வேணும். கோட்பாட்டு செயற் தளத்தில் ஒரு ஒன்றிணைவு இருக்க வரவேண்டும். அப்போதுதான் ஆக்க பூர்வமாக செயற்பட முடியும்.

ஒரு கட்டத்துக்குப் பிறகு தனி நபர்கள் முரண்பாடுகள் இவங்களிடம் தலை தூக்கிறது. ஏனென்டா இந்த புத்தகத்தின் வருகைக்கான உழைப்பும் பொருளாதார ரீதியான உதவியும் கலைச்செல்வன், லட்சுமி பக்கம்தான் கூடுதலா இருந்தது. அவங்கட முயற்சியால்தான் அது வெளிவந்தது. அத்தோட கலைச் செல்வன், லக்சுமி அரசியல் சார்ந்து ஆளுமையானவங்க. அப்ப அதன் தாக்கம் இருக்கும். இவங்களால ஒருகட்டத்திற்கு மேல இணைந்து செயற்பட முடியல்ல. அரசியல் சமநிலை இவர்களிடம் இருக்கல்ல. முரண்பாடுகள் வருகிறது. முரண்பாடு வந்தவுடன் இவங்க கலைச்செல்வன், லட்சுமி மீது வைத்த கூற்றச்சாட்டு இருக்குத்தானே அது அபாண்டமான ஆரோக்கியமற்றதா இருந்தது.

தேசம்: யார் குற்றச்சாட்டுகள வைச்சது…?

அசோக்: ஞானம், கற்சுறா ஆட்கள்தான் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிட்டு. அப்ப ஞானமெல்லாம் எங்களுடன் மிக நெருக்கமான உறவு தான். கற்சுறாவோடும் நாங்கல்லாம் நெருக்கமான நண்பர்கள் தான். இந்த முரண்பாட்டின் அடிப்படையில நாங்க ஒரு சைட் எடுக்க வேண்டி வந்து விட்டது. நாங்கள் பார்த்தோம், கலைச்செல்வன், லட்சுமி ஆட்கள் பக்கம்தான் நியாயம் இருந்தது. நான் தோழர் புஷ்பராஜா எல்லாரும் கலைச்செல்வன் பக்கம்தான் சப்போர்ட் பண்ணினோம். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டம். பிரச்சனை மிக தீவிரமாக கூர்மை அடைந்தது.

பிரச்சினையின் போது இவங்க முன்வைக்கிற குற்றச்சாட்டு தெரியும்தானே. “இவன் வேளாளன், இவன் சாதி பார்க்கிறான்” போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இந்த குற்றச்சாட்டை நீங்கள் வேறாக்கள் மேல முன்வைக்க முடியும். ஆனா கலைச்செல்வன், லட்சுமி மேல முன்வைக்கிறது அபாண்டம். அவங்க சாதிய தற்கொலை செய்து கொண்டவர்கள். இயல்பாகவே அரசியல் ரீதியாக வளர்ந்தாக்கள். திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டுகளை அவங்க மேல முன்வைத்தார்கள். அத எங்களுக்கு சகிக்க முடியாமல் இருந்தது. அடுத்தது இவங்க நடந்துகொண்ட முறைகள். நாங்கள் புலிகளின் வன்முறைகள் பற்றி கதைக்கிறம். இவங்க கலைச் செல்வன் இல்லாத நேரம் பார்த்து லட்சுமி வீட்டுக்கு போய் கதவுல எல்லாம் அடிச்சு பெரிய கலாட்டா பண்ணினாங்க. என்ன பிரச்சனை என்றால் கருத்தியல் சார்ந்து வருகிற முரண்பாடுகள் அனேகமாக வன்முறைகளுக்கு போவதில்லை. ஆனா தனிநபர் பிரச்சனைகளால வாற முரண்பாடுகள் இப்படித்தான் வன்முறை மனோபாவத்தை ஏற்படுத்தும். அதுதான் இங்கையும் நடந்தது. இந்த பிரச்சனைகளுக்கு பிறகு பேர்லினில் நடந்த இலக்கிய சந்திப்பில் இவங்க நடந்துகொண்ட முறை மோசமானது. அடிபுடி வரும் நிலைக்கு போனது. நல்ல வேளை சுசிந்திரன், பாரதி, பரா ஆட்கள் தடுத்துவிட்டாங்க.

ஒரு பக்கம் நாங்க வன்முறைகளை எதிர்க்கிறோம். மறுபக்கம் இப்படி செய்றத ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் தான் நாங்கள் கலைச்செல்வன், லட்சுமி ஆட்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தோம். பிறகு அது பெரிய முரண்பாடா போய். அதுல அவங்க நடந்துகொண்ட முறை பிழை. அதால எங்களுக்கு அவங்கட நட்புகளும் போயிட்டு. உண்மையிலேயே இந்த முரண்பாட்டை தீர்த்திருக்க முடியும். ஞானமும், கற்சுறாவும் மோசமானவர்கள் இல்லை. நியாயங்களை ஏற்று இருப்பார்கள்.பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனா இந்த முரண்பாட்டை பயன்படுத்தி இதை கூர்மையாக்கியதில் வேறு சிலருக்கு பங்கு உண்டு. இவங்களும் அவங்களின்ற கதையை கேட்டு பின்னால போனாங்க. இந்த முரண்பாடு வந்த உடனே ஒரு குரூப் அவங்களுடன் இணைந்து கொண்டது. அது எப்ப எப்ப என்டு பார்த்துக் கொண்டிருக்கிற தவறான சக்திகள் இணைந்து கொண்டாங்க.

தேசம்: யார் அந்த தவறான சக்திகள்..?

அசோக்: அந்த நேரம் சோபாசக்தி எல்லாம் உடனடியாக போய் சேர்ந்தாங்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

 • Democracy
  Democracy

  But one has no multiple A..? 🙂
  Indian policy Labyrinth, an offshoot from 19th century tolerance, if anybody f…ed in the A.., Transfer it to lower Level Bhakti-Prayer (MK Gandhi => Dalit-Surplus) and “Enjoying the Pain” like a DANCE, like a #LungiDance.

  One Indian Diplomat : “#Afganistan & Iraq were also legitimate UN member when invaded by US & NATO forces. In that case who was war criminal?”-

  One Western Military head : “Why were you silent?”-

  Reply