புதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் நேற்று மாலை புறப்பட்ட விங்டாங் சரக்குக் கப்பல் இன்று முல்லைத்தீவு கடலிலிருந்து 500 மெற்றித் தொன் உணவுப் பொருட்களை புதுமாத்தளன் கரைக்கு இறக்குகிறது. முல்லைக்கடலில் இறங்குதுறை வசதியின்மையால் சிறிய படகுகளை பயன்படுத்தி பொருட்களை இறக்குவதற்காக படகுகளுக்கு 200 லீட்டர் பெற்றோல் மண்ணெண்ணெய்யும் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அரிசி, சீனி, மா, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஒரே தடவையில் கொண்டுசெல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை 3.00 மணிக்கு 500 மெற்றிக் தொன் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றதுடன், இன்று புதுமாத்தளன் பகுதி கடலில் தரித்து நிற்கும் என்று கூறிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண இதற்கு முன்னரும் 250 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பொருட்களை இறக்கும் சிறிய வள்ளங்கள் பல தடவைகள் கரைக்கும் கப்பலுக்குமாய் செல்ல வேண்டியதால் பெருந்தொகையான எரிபொருட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்தே 200 லீட்டர் எரிபொருளும் அனுப்பப்படுவதாகவும் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.