சிறிலங்கா நாடாளுமன்றில் தியாகி திலீபனின் வார்த்தைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நேற்று திருத்தங்களுடன் நிறைவேறியது.
இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்திபன், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்று கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என்று திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் 12 நாட்கள் தியாகி திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு உயிர்த் தியாகம் செய்திருந்தார்.
இந்தச் சட்டம் இறுதியில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது தியாகம் தங்களிடம் கூறியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.
இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் திலீபன் ஆகியோர் ஆதரவாக வழக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.