இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள யோசனைகளை அரசாங்கம் ஆராயவுள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள வடக்குகிழக்கு அபிவிருத்தி நிதியம் தொடர்பான யோசனை குறித்து மேலும் ஆழமாக ஆராயவேண்டியுள்ளது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் வங்கிதுறை உட்பட வழமையான வழிமுறைகள் ஊடாக இடம்பெறவேண்டும், அவற்றிற்கு வெளியே இது இடம்பெற முடியாது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் பேசியுள்ள அவர்,
யுத்தத்தின் பின்னரும் நாங்கள் சில சலுகைகளை வழங்கினோம்,ஆகவே அதனை போன்று வரிச்சலுகைகள் வழங்கப்படலாம் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் புலம்பெயர்ந்தவர்கள் இங்கு முதலீடு செய்தால் நீண்டகால குத்தகைக்கு நிலங்களை அரசாங்கம் வழங்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல பகுதிகளிலும் இலங்கையிலும் இது இடம்பெறுகின்றது என நீதியமைச்சர் பொருளாதார வர்த்தக வலயம்போன்றவை குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் உயர் வட்டாரங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது நாங்கள் அதனை ஆராய்வதற்கு இணங்கினோம் இதற்கான பொறிமுறைகளை உருவாக்கவேண்டும். அமைச்சர் அலி சப்ரி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இது குறித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் அதன்பின்னர் இந்த விடயத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என தெரிவித்துள்ளன.
இந்த யோசனை விசேட நிதியம் தொடர்பானது என்றாலும் புலம்பெயர்ந்தவர்கள் வடக்குகிழக்கில் முதலீடு செய்ய தயாராகவுள்ளனர் என்ற எண்ணமே காணப்பட்டது,என தெரிவித்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் உயர்வட்டாரங்கள் தற்போது அவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் அதிகளவு முதலீடு செய்துள்ளனர் – குறிப்பாக தொடர்மாடிகளில் முதலீடு செய்துள்ளனர்-அவர்கள் அவ்வாறான விடயங்களை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுக்கலாம் என ஆராயப்படும் வரிச்சலுகைகள் விசேட சலுகைகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளன.