இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.
உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்றது.
இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் உறவுவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
குறித்த உடன்படிக்கைகள் வருமாறு,
- காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளுக்கு நவீன கணினி கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் பலகைகளை வழங்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.
- இலங்கையில் விசேட இலத்திரனியல் அடையாளஅட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.
- சமுத்திர பாதுகாப்பு தொடர்பு மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு மற்றுமொரு புரிந்துணர்வு உடன்படிக்கை.
- இலங்கையிலுள்ள மீனவத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் வகையிலான உடன்படிக்கை.
- சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.
- யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் ஐபிரிட் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு போன்ற உடன்படிக்கைகள் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடையே கைச்சாத்திட்டுள்ளன.