ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும் தங்களது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு தாயகம் திரும்பி ஆதரவு அளிக்குமாறு அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.
“அதிகளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர்கள் சிலர் தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசவில்லை. அவர்கள் யாரென்றால்லாம் எனக்கு தெரியாது. துரதிர்ஷ்டவசமாக அரசுக்கு எதிராக பேசுவதற்கு இந்த கிரிக்கெட் வீரர்கள் பயப்படுகிறார்கள். மேலும் அமைச்சகத்தின் கீழ் உள்ள கிரிக்கெட் வாரியத்திலும் இந்த கிரிக்கெட் வீரர்கள் பணிபுரிவதால் தங்களது வேலையை பாதுகாத்துகொள்ளவே முயற்சிக்கின்றனர்.
எனினும் சில இளம் கிரிக்கெட் வீரர்கள்இ தானாக முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகள் வழங்கியுள்ளனர். ஏதாவது தவறு நடந்தால் உங்கள் வேலையைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் அதை எதிர்த்துப் பேச அவர்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். மக்கள் என்னிடம் ஏன் போராட்டத்தில் நீங்கள் பங்குகொள்வது இல்லை என்று கேட்கிறார்கள்.
நான் கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மேலும் இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் போராட்டங்களில் ஈடுபடவில்லை. அதனாலேயே நானும் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. அதுவே இந்த நாட்டு மக்களின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
ஐ.பி.எல்லில் விளையாடும் வீரர்கள் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன். நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அந்த வீரர்கள் ஒரு வாரத்திற்கு தங்களது ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.