“சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.” – எம்.ஏ.சுமந்திரன்

“சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அங்கு பேசிய அவர்,

“ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் சொல்லி விட்டனர். 2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். இன்றுதான் சிங்கள மக்கள் அதைச் சொல்கின்றனர். இது எமக்குச் சிரிப்பாக இருக்கின்றது.

யார் இந்தப் போராட்டக்காரர்கள் என்று பார்த்தால் இளைஞர்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சக்கள் இங்கே இடம்பெற்ற போரைக் காட்டி கடன் வாங்கினார்கள். இப்போதும் நாட்டைக் காட்டி கடன் வாங்கி இருக்கிறார்கள். நாம் அன்று அல்லல்பட்டோம். எங்களுக்காக ஒருவர் கூட அன்று பேசவில்லை. ஆனால், இப்போது போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் இதை உணர்வார்கள்.

இதே காலிமுகத்திடலில் 66 வருடங்களுக்கு முன்னர் சாத்வீகப் போராட்டத்தை அன்று மேற்கொண்டோம். இதைத் தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்றும் நாம் சமத்துவத்துக்காகப் போராடினோம். ஆகவே, உங்களின் போராட்டத்தின் நோக்கத்தை அறிவதற்கு நாம் இப்போது ஆவலாக உள்ளோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *