அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அரச வேலை வாய்ப்புகள் வீழ்ச்சியடையும்!! 16 லட்சம் அரச ஊழியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர்!!! – லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முன்னாள் பா உ மு சந்திரகுமார்

அடுத்த பத்து ஆண்டுகளில் அரச வேலை வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்படும் என லிற்றில் எய்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று நாடுள்ள நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்துவதிலேயே கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் இந்நிலையில் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குவது என்பது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் 10 April மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு ஆசியுரை வழங்கிய ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோயில் பிரதம குரு முத்துகமார குருக்கள் சிவஸ்ரீ மகேஷ்வரநாத சர்மா, அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களை அடக்கி ஒடுக்குவதாகவும் ஆனால் லிற்றில் எய்ட் போன்ற அமைப்பு கீழேயுள்ள மக்களை கல்வியறிவூட்டி வளர்த்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

கருணா நிலைய குரு எஸ் கே டானியல் தனது ஆசியுரையில் லிற்றில் எய்ட் இவ்வளவு தொகையான மாணவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் இவ்வளவு தொகையான மாணவர்களுக்கு கல்வியும் சமூகப் பண்புமூட்டி அவர்களை நல்வழியில் பயணிக்கச் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மாற்றங்களை யாரும் இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் லிற்றில் எய்ட் தங்களிடம் வரும் மாணவர்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை ஆளுமைகளாக விருத்தி செய்து அனுப்புவதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார்.

வன்னி மண் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் பல்வேறு சமூகச் சிக்கல்களை எதிர்கொள்கின்றது என்பதைச் கூட்டிக்காட்டிய த ஜெயபாலன் இளைஞர் வன்முறை, போதைவஸ்து பழக்கம், இளவயதுத் திருமணங்கள், வீதி விபத்துக்கள் மற்றும் இவற்றின் ஒட்டுமொத்த தாக்கமாக கல்வி வீழ்சி என்பன வன்னி மண் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை என்றும் இவற்றுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவதைத் தவிர்த்து இதற்கான தீர்வைப் பற்றி தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜி தர்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசிய அவர் தொழில்நுட்ப அறிவு இல்லாமால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும் எனத் தெரிவித்தார். மாணவர்கள் நேரான (பொசிடிவ்) எண்ணங்களை வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எமது பாரம்பரியமான ஆமையும் முயலும் கதை போல் அல்லாமல் ஆமையும் முயலும்; இணைந்து கூட்டாக தரையிலும் திண்ணீரிலும் செயற்படுவதன் மூலம் கூட்டு உழைப்பின் முக்கியத்துவதை;தை விளக்கினார் தர்மநாதன் விளக்கினார்.

லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிகள் பற்றியும் குறிப்பிட்டார். இன்றைய நெருக்கடியான சூழலைக் கண்டு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் நெருக்கடியான காலகட்டங்களிலேயே மனித குலம் புதிய திருப்பு முனைகளை கண்டுகொண்டது வரலாறு என்றும். ஐரோப்பாவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணம் அம்மக்கள் எதிர்கொண்ட அசாதாரண காலநிலை. அதுபோல் எமது நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி எமது கல்வியலாளர்களையும், மாணவர்களையும், வர்த்தகர்களையும், அரசியல்வாதிகளையும் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டும் எனத் தெரிவித்தார். மாணவர்களாகிய நீங்கள் இன்று கற்பது நாளை உருவாகப் போகின்ற பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்காகவே அல்லாமல் வெறும் பெறுபேறுகளுக்காக, சான்றிதழ்களுக்காக, பட்டங்களுக்காக என்று குறுக்கிவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகளைப் பற்றி விதந்துரைத்த முனானாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் லிற்றில் எய்ட் எவ்வளவு சிரமங்களின் மத்தியில் இம்மண்ணில் செயற்பட்டு தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதற்கு காலம்சென்ற வி சிவஜோதியின் அர்ப்பணிப்பு மகத்தானது எனத் தெரிவித்தார். மு சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் த ஜெயபாலன் கல்வியைக் கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதை தனது சொந்த அனுபவத்தினூடாக மாணவர்களுக்குக் காட்டியவர் என்றும் எதிர்காலத்தில் அரச வேலைகளுக்காகக் காத்திராமல் தனியார் துறைகளிலும் சொந்த தொழில் முயற்சிகளை உருவாக்குவதிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்தார். சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில் அரசதுறையில் 16 லட்சம் பேர் தேவைக்கதிகமாக வேலைக்கமர்த்தப்பட்டு உள்ளதாகவும் கடந்த கால அரசுகளின் திட்டமிடப்படாத பொருளாதார நடவடிக்கைகளே நாட்டினை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

நாங்கள் விழுமியங்களை இழந்துவருகின்றோம் எனச் சுட்டிக்காட்டிய கிளி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய அதிபர் பெருமாள் கணேசன்; இலங்கையில் தமிழர்கள் மத்தியில் விழுமியங்களை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை எனத் தெரிவித்தார். தெற்கில் அனாகரிக தர்மபால சிங்கள மக்களின் விழுமியங்களை முன்வைத்து அவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் தமிழ் தரப்பில் ஆறுமுகநாவலர் அதனைச் செய்யத்தவறியதை பெருமாள் கணேசன் அங்கு சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மண்ணில் இவ்வளவு திரளான இளம் தலைமுறையினரை காண்பதும் அவர்களைக் கொண்டு லிற்றில் பேர்ட்ஸ் என்ற இந்த சஞ்சிகையை வெளியிட்டு இருப்பதும் ஒரு போற்றுதற்குரிய விடயம் எனவும் பெருமாள்கணேசன்; தனது நயவுரையில் குறிப்பிட்டார். லண்டன் மெயிலாக, த ஜெயபாலன் லிற்றில் மாமா என்ற என்ற பெயரில், “தமிழ் சமூகத்தில் கல்வியும் அறிவும் வெறுமனே பாடப் புத்தகங்களுக்குள்ளும் சான்றிதழ்களுக்குள்ளும் முடக்கப்பட்டு, உண்மையான கல்வி, அறிவு என்பன தொலைக்கப்பட்டு விட்டது” என்ற குறிப்பைச் சுட்டிக்காட்டிய அவர் எழுதவும் வாசிக்கவும் லிற்றில் எய்ட் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்றோர். சஞ்சிகையில் வெளியான ஒவ்வொரு ஆக்கத்தையும் தனது ஆய்வுக்கு உட்படுத்திய பெருமாள்கணேசன் தனது மதிப்பீட்டை மிகக் காத்திரமாக முன்வைத்தார். கிளிநொச்சியின் ஆளுமைகளை இனம்கண்டு அவர்களது நேர்காணலை பதிவு செய்ததை விதந்துரைத்த அவர் சிறுவர் சஞ்சிகையில் சித்திரக் கதைகள், நாடகக் கதைகள், சித்திரங்கள் என்பனவும் எதிர்கால இதழ்களில் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக மாணவன் சனோசன் பத்மசேனன தன்னுரையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு எண்ணம் போல் வாழ்வதன் அவசியத்தையும் சிறந்த எண்ணங்களை உருவாக்க்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதுவொரு சம்பிரதாயபூர்வமான நன்றியுரையல்ல எனக்குறிப்பிட்ட லிற்றில் எய்ட் ஆசிரியை பவதாரணி அனைவரதும் ஒத்துழைப்பும் இன்றி இந்த சான்றிதழ் வழங்கும் இந்நிகழவை இவ்வளவு சிறப்பாகச் செய்திருக்க முடியாது எனத் தெரிவித்தார். நன்றியுரைக்குப் பின் மாணவர்கள் தங்களுக்குள் பாடல்களைப் பாடியும் ஆடியும் தங்கள் தகமையடைவைக் கொண்டாடினர்.

உரைகளின் நடவே மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பரிசுகள், ஆசிரியர்களுக்கான கௌரவிப்புகள் எனபன இடம்பெற்றன. கல்வியியலாளர்கள் நைற்றா பரீட்சைப் பரிசோதகர் – அபிமன், ஐசிரி கற்கைகளுக்கான சோனல் டிரெக்டர் சந்திரமோகன், அதிபர் வட்டக்கட்சி ஆரம்பப் பாடசாலை பங்கயற்செல்வன், அதிபர் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் பெருமாள்கணேசன், அதிபர் கிளிநொச்சி விவேகானந்த கல்லூரி திருமதி ஜெயா மாணிக்கவாசகர், முன்னாள் தையல் ஆசிரியர் ஹேமமாலினி உதயகுமார் ஆகியோர் மாணவர்களுக்கான சான்ஙிதழ்களை வழங்கினர். மாணவர்களும் மாணவிகளும் ஆரவாரத்துடன் தொழில்சார் ஆடைகளை அணிந்து வந்து தங்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் முடிவில் தையல் மற்றும் வடிவமைப்பு கலைகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உருவாக்கிய அழகியல் பொருட்கள் ஆடைகள் என்பன காட்சிப்படுத்தப்படட்டு விற்பனையும் இடம்பெற்றது. இப்பொருட்களை எதிர்காலத்தில் ஒன்லைனில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஆசிரியை அனுஷியா ஜெயநேசன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இரு மணிநேரம் ஆடிப் பாடி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *