இலங்கையின் பொருளாதார நெருக்கடி – என் பயண அனுபவம்: இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது என மறுக்க வேண்டும்! சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு உடன்படக் கூடாது!! அத்தியவசிய உணவு – எரிபொருளில் இலங்கை தன்னிறைவு பெற வேண்டும்!!!

கொரோனா மற்றும் காரணங்களால் நான்கு ஆண்டுகளுக்குப் பின், ஏப்ரல் 2ம் திகதி காலை லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை பஹ்ரெயின், மாலைதீவு ரான்ஸிற் ஊடாக கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்தேன். வக்சீன் பாஸ்ட்போட், கோவிட் மெடிகல் இன்சுரன்ஸ், ஈவீசா ஆகியவற்றோடு இறங்கி குடிவரவு அலுவலர்களின் அனுமதிக்காக வரிசையில் நின்றேன். பெரிதாக நெருக்கடி இருக்கவில்லை. குடிவரவு அதிகாரி கோவிட் பாஸ்ட் போர்டை பாரத்து ஈவிசாவையும் பார்வையிட்டபடி நாட்டின் மோசமான பொருளாதார நிலையைப் பற்றி குறிப்பிட்டார். விலைவாசியைப் பற்றி குறிப்பிட்டார். ஆட்சியாளர்களைச் சொல்லித் திட்டினார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை நாட்டின் நுழைவாயிலிலேயே உணர முடிந்தது. அதன் பின் என் ஈவிசாவை பார்த்தவர், எனது பாஸ்ட்போட் இலக்கம் பொருந்தவில்லை என்றார். ஈவிசாவுக்கு விண்ணப்பிக்கும் போதே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. பாஸ்போட் இலக்கத்தின் கடைசி இலக்கம் பார்கோட்டுக்கு உரியது அதனை நான் போடத்தவறி இருந்தேன். நான் மீண்டும் ஈவிசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு செலவாகும். நேரம் எடுக்கும். ஆகவே மேலதிகாரியிடம் பேசுவதாக அழைத்துச் சென்றார் அக்குடிவரவு அதகாரி. மேலதிகாரியும் நாங்கள் இப்படிச் செய்வதில்லை இந்த அலுவலர் கேட்டதால் செய்திருக்கிறேன் என்று அவரை கவனிகச் சொன்னார். பிறகென்ன ஒரு நம்பரை இணைத்ததற்காக அவருக்கு 20 பவுண்கள் (8,000 ரூபாய்) வழங்க வேண்டி இருந்தது. வருபவர்களிடம் இருந்து பணம் கறப்பதற்காகவே இந்தப் பஞ்சப்பாட்டு பாடப்பட்டது என்ற உணர்வே எனக்கு வந்தது.

இதனையெல்லாம் முடித்துக்கொண்டு வெளியே வந்து என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பர்களைச் சந்தித்தால் கொழும்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் எவ்வித கெடுபிடியும் இல்லை. நேரடியாக கிளிநொச்சி செல்லத் திட்டமிட்டு இருந்த பயணம் கொழும்பில் தங்கிச் செல்வது என்று முடிவானது. ஊரடங்கு மறுநாள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும். இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வரும் சனி, ஞாயிறு தினங்களிலும் ஊரடங்கு போடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நான் வந்த லிற்றில் எய்ட் நிகழ்வுகள் அந்த சனி, ஞாயிறு (ஏப்ரல் 9, 10) தான் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஊரடங்கு போடப்பட்டதற்கு பிரதான காரணம் மக்கள் போராட்டத்தில் இறங்கி அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சமே. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டங்களும் போராட்டங்கள் வலுவில்லாததாலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படாது என்ற எண்ணம் நான் தொடர்பு கொண்டவர்களிடம் இருந்தது. அதனால் நிகழ்ச்சியை திட்டமிட்டபடி சனி, ஞாயிறு தினங்களில் நடத்த முடிவு எடுக்கப்பட்டு அது சிறப்பாகவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக இலங்கை செல்கின்ற போது 20, 25 ரூபாய்களுக்கு தனியார் வாகனத்தை அமர்த்தி செல்வதுதான் வழமை. இரு வாரம் இலங்கையில் தங்கினால் எனக்கு ஒரு லட்சம் வரை போக்குவரத்துக்கு செலவாகிவிடும். இம்முறை அதற்கு மாறாக புகையிரதத்தில் செல்ல தீர்மானித்து திங்கட் கிழமை காலை 5:30 மணி புகையிரதத்தை பிடிக்க புகையிரதம் சென்றோம். காலை 5:35, 6:40, 11:30க்கு யாழ் செல்லும் புகையிரதங்கள் புறப்படும். ஆனால் காலை எட்டு மணிவரை ரிக்கற் கவுன்டர் திறக்கப்படவில்லை. அவை திறக்கப்பட்ட போதும் யாழ் செல்லும் புகையிரதம் செல்லுமா இல்லையா என்று யாரும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியவில்லை. பாரிய வரிசையில் எந்தத் தகவலும் இல்லாமல் அனைவரும் காத்து இருந்தோம். கைக்குழந்தைகளோடு தாய்மார். வேலைக்குச் செல்பவர்கள் என்று அனைவரும் வேறுவழியில்லாமல் காத்திருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பின் ரிக்கற் கவுண்டரில் உள்ளவர் சொன்னார் “யாழ்ப்பாணம் செல்லும் ரெயின் நிற்கிறது. ஆனால் ரைவர் இன்னமும் வரவில்லை. வரவாரோ தெரியாது” என்று. பல்லாயிரம் பேர் பயணிக்கும் ஒரு புகையிரதத்தின் சாரதி, இரு மணிநேரம் கழித்து வந்த பின்னரே ரிக்கற் வழங்கப்பட்டது. வழமையாக பல்லாயிரம் ரூபாய் செலவழித்து செல்லும் எனக்கு ஆயிரத்து ஐந்நூறு ருபாயோடு ஏசி யுடன் பயணம் சௌகரியமாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட இரு சம்பவங்களுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆட்சியாளர்களைத் திட்டுபவர்களும் தாங்களும் அந்த லஞ்சம் ஊழல்களிலேயே வாழ்கின்றனர். அதே போல் தனது கடமையைப் பொறுப்பாகச் செய்ய வேண்டிய ஒரு பணியாளர் பல்லாயிரக்கணக்காணவர்களை அங்கலாய்க்க வைத்து காக்க வைத்து எவ்வித அறிவித்தலும் இல்லாமல் இரு மணிநேரம் தாமதமாகப் பணிக்கு வருகின்றார். அந்த ரெயிலுக்காக காத்திருந்த பல்லாயிரக் கணக்கானவர்கள் சில மணிநேரங்களை இழந்துள்ளனர். இவ்வாறான பொறுப்பற்ற மனிதர்களும் பொறுப்பற்ற நிர்வாகமும் பொறுப்பற்ற அரசியல் வாதிகளும் நாட்டின் பொருளாதாரக் கட்டுமானங்களை நிலைகுலைய வைத்துள்ளனர். இதில் ஆட்சியாளர்களை மட்டும் குற்றசம்சாட்டி சார்புநிலை அரசியல் செய்வது இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எவ்விதத்திலும் தீர்வாகாது.

ஆட்சியில் உள்ளவர்களின் அதிகார துஸ்பிரயோகம், லஞ்சம், ஊழல் எல்லைகளைக் கடந்தது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது சகபாடிகளும் கொரோனாவுக்காக காலாண்டில் கடன் வாங்கப்பட்ட 200 பில்லியன் பவுணில் 10வீதமான 20 பில்லியனை ஆட்டையைப் போட்டது பிரித்தானிய நாளிதழ்களில் முன்பக்கச் செய்தியாகவே வெளிவந்தது. இலங்கை ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினரும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இன்றைய பொருளாதார நெருக்கடி ஆட்சிக்கு வந்த எல்லா கட்சியினரும் எவ்வாறு மக்கள் பணத்தை ஆட்டையைப் போட்டனர் என்பதல்ல. அதுவும் பல காரணிகளில் ஒன்று.

இது முற்றிலும் இலங்கையின் பொருளாதாரக் கட்டுமானம் பற்றியது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரையுமான இலங்கைப் பொருளாதாரம் இறக்குமதிப் பொருளாதாரமாகவே வளர்ந்து வந்தது. 1971 சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இதில் ஒரு பாரிய மாற்றம், சிறிமாவோ பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்ட போதிலும் அடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் உலக சந்தைக்கு இலங்கையைத் திறந்துவிட்டு, மேற்குநாடுகளின் நலன்களுக்கு சேவகம் செய்தது. எமது நாட்டின் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு முடிவுப் பொருட்களாக இறக்குமதி செய்யப்பட்டது. ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக கீழ்நோக்கி வீழ்ச்சியடைய இறக்குமதிச் செலவீனம் ரொக்கற் வேகத்தில் எகிறியது. போதாக்குறைக்கு 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தம். வருமானம் இல்லாமல் செலவு செய்தோம்.

எண்பதுக்களில் பல கிராமங்களில் மின்சாரம் இருக்கவில்லை, கல்வீடுகள் இருக்கவில்லை, மிதி வண்டிகள் இருந்தது, அத்தியவசியமற்ற பொருட்கள் இருக்கவில்லை, ரிவி இருக்கவில்லை. கார்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று மின்சாரம் இல்லாத வீடுகள் இல்லை. கொட்டில் வீடுகள் காணமுடிவதில்லை கல்வீடுகள் மட்டுமே, இப்போது மிதிவண்டிகள் இல்லை மோட்டார் சைக்கிள்கள் குவிந்துவிட்டது, வீடுகளில் அத்தியவசியமற்ற பொருட்கள் குவிந்து கிடக்கின்றது, கார்களும் பெருகிவிட்டது. வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது. கோழி எச்சம் போடுவதால் கோழி வளர்ப்பதில்லை. மோபைல் போனும் சீரியலும் வந்ததால் ஆடு, மாடு வளர்க்க நேரமில்லை. அங்கரில் வாழகின்றோம். வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது.

கோப்ரேட் நிறுவனங்கள் லாபத்திற்காக அறிமுகப்படுத்தும் எல்லாவற்றையும் வாங்கிக் குவித்து சுகபோகம் அனுபவிக்கிறோம். இந்த வாழ்க்கைத் தரம் உழைப்பால் உயரவில்லை. கடனோடு உயர்ந்தது. 16 லட்சம் அரச ஊழியர்கள் தேவைக்கதிகமாக அமர்த்தப்பட்டு உள்ளனர். ஆனாலும் அரச அலுவல் ஒன்றைச் செய்ய மக்கள் இன்னமும் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. கணவர் இறந்து ஓராண்டாகியும் விதவையான சகோதரிக்கு இன்னமும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பெரும்பாலான அரசாங்க ஊழியர்கள் பொறுப்புடன் பணியாற்றத் தயாரில்லை.

வரவு இல்லாமல் செலவு செய்தால் வீடு மட்டுமல்ல நாடும் வங்குரோத்தில் தான் செல்லும். எங்களுடைய நுகர்வுச் கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்;. நாடு ஓரளவு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். இதுவரையான பொருளாதார அணுகுமுறையில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். உள்ளுர் உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டும். எரிபொருள், மருந்துவகைகள், மற்றும் அத்தியவசிய பொருட்கள் தவிர்ந்த அனைத்து இறக்குமதிகள் மீதும் நிரந்தர கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.

ஆட்சியாளர்கள் நாட்டின் அன்றாட சூழ்நிலையை கணக்கிலெடுத்து நாளுக்கு நாள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றாமல் நீண்ட கால பொருளாதார திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதற்கு முதற்படியாக:
1. கடன்களை மீளச்செலுத்த முடியாது என அறிவிக்க வேண்டும்
2. சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தக்கூடாது – அதன் நிபந்தனைகள் நிராகரிக்கப்பட வேண்டும்
3. இறக்குமதிகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்
4. ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும்
5. தன்நிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நாடு நகர வேண்டும்

நாட்டு மக்களுக்கு ஏன் நாடு இந்நிலைக்கு தள்ளப்பட்டது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் விளக்கி, மேற்குறிப்பிட்டவற்றை உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்து, அதன்படி செயற்பட வேண்டும். இன்று ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அதனிலும் பலவீனமானதாகவே இருக்கின்றன. சிறுபான்மைக் கட்சிகள் அரசியல் ஜோக்கர்களாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. அவர்கள் தங்கள் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்களுக்கு தங்கள் குறுகிய அரசியல் நலன்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

மேற்குறிப்பிட்ட அதிரடி நடவடிக்கைகள் ஒரு குறுகிய காலத்திற்கு சில ஆண்டுகளுக்கு மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே. ஆனால் இந்நடவடிக்கைகள் நீண்ட காலத்தில் இலங்கைக்கு பாரிய நன்மை பயப்பதுடன் மக்களின் வாழ்நிலையிலும் வாழ்க்கைத் தரத்திலும் உண்மையான உயர்வை ஏற்படுத்தும்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றி கிளிநொச்சி செய்தியாளர் குறிப்பிடுகையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றைச் செய்ய ஒரு லட்சம் வழங்கியதாகவும் அப்போராட்டத்தில் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார். எனது பயணத்தின் இறுதியாக ஏப்ரல் 13 மீண்டும் கொழும்பு திரும்பினேன். அப்போது காலிமுகத்திடலில் நிகழும் சுழற்சிமுறைப் போராட்டம் பற்றி பேசிக்கொண்டோம். அங்கு சென்று கடற்கரையோரத்தில் பொழுதைகழித்துவிட்டு வந்தால் உணவு குளிர்பானம் என்று ஒரு விடுமுறையைக் கழிப்பது போல் பன்பலாக இருக்கும் என்றனர். மறுநாள் நேரே சென்று பார்த்தேன் கடற்கரையை அண்மித்து விடுமுறைக் கழியாட்டம் போல் தான் இருந்தது. காரில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு போராடிக்கொண்டிருந்தனர். உணவு, குடிபானங்கள் விநியோகிக்கப்பட்டது. வந்தவர்கள் ரென்ற் அடித்து கடற்கரை காற்றையும் ரசித்து போராட்டத்தையும் நடத்தினர். மற்றும்படி வறுமைக் கோட்டில் இருந்த யாரும் அங்கு போராடியதாகத் தெரியவில்லை. காலிமுகத்திடல் போராட்டமானது நடுத்தர வர்க்கமும் அல்ல அதற்கும் மேல் கார் வைத்திருக்கக் கூடிய நடுத்தர வர்க்கத்தால் நடத்தப்படுகின்ற போராட்டம். அதில் நானும் கலந்து சிறப்பித்தேன்.

எனது பயணத்தின் ஒரு கட்டமாக லிற்றில் எய்ட் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு சிகிரியா, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவு சென்று ஆடிப் பாடி கொண்டாடித் திரும்பினோம். நாம் சென்ற போது யாழ்ப்பாணம் கிளிநொச்சி பிரதேசங்களில் இருந்தும் வாகனங்களில் சுற்றுலா வந்திருந்தனர். தையல் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு குழவினரும் சுற்றுலா வந்திருந்தனர். நாம் நாற்பது பேர் சுற்றுலா சென்றோம். 45 பார்சல்கள் எடுத்து இருந்தோம். வாங்கிய சாப்பாடுகளில் 5 பார்சல்கள் மிஞ்சிவிட்டது. அதனை யாரும் பிச்சை எடுப்பவர்களிடம் கொடுக்கலாம் என்றால் சிகிரியாவில் இருந்து அனுராதபுரம் ஊடாக கிளிநொச்சிவரை யாரும் பிச்சை எடுப்பதை பார்க்கவில்லை. அப்பார்சல்களை யாரும் வீட்டுக்கு கொண்டு செல்லவும் தயாரில்லை. நானே கொண்டு சென்று என்வீட்டார் மறுநாள் சாப்பிட்டனர்.

ஆனால் லண்டன் வந்து இருநாட்களில் சூம்மீட்டிங்கில் இலங்கை பட்டினிச்சாவை நோக்கி நகர்வதாக பெரும்கதையாடல் நடந்தது. மருந்து இல்லாமல் மக்கள் உயிராபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த உரையாடல்கள் என் அனுபவத்திற்கு முற்றிலும் எதிர்மாறானதாகவே இருந்தது. அங்கு யாரும் பட்டினியின் விளிம்பில் இல்லை. உண்மை நிலை என்னவென்றால் இலங்கை முழவதுமே பல்வேறுதுறைசார்ந்த வேலைகளுக்கும் ஆட்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. வெள்ளிக்கிழமை வேலைக்கு வருபவர் மீண்டும் திங்கட்கிழமை விடுமுறை கழித்து வேலைக்கு வருவாரா என்ற பதட்டத்தில் வியாபார நிறுவனங்கள் இருக்கின்றன. கிளிநொச்சியில் மருத்துவரொருவரால் இரு மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போனிக்ஸ ; என்ற உணவகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பணியாற்றுபவர்கள் எல்லோருமே மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்த முகாமையாளரிடம், ஏன் கிளிநொச்சியில் வேலைக்கு ஆட்கள் இல்லையா என்று கேட்டேன். அவர்கள் யாரும் ஓரிருநாட்களுக்கு மேல் நிற்பதில்லை என்றார். என்ன சம்பளம் வழங்குகிறீர்கள் என்று கேட்டேன். உணவு தயாரிப்பவருக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்றும் வெய்ற்ரேஸ்க்கு நாற்பதினாயிரம் வழங்குவதாகவும் தெரிவித்தார். நான் அங்கு சென்ற செவ்வாய் அன்று அவர்கள் எல்லோரும் புத்தாண்டுக்கு ஊருக்குச் செல்வதால் உணவகம் சிலநாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. என்னோடு பேசிய முகாமையாளருக்கு இருக்கும் பதட்டம் இவர்களில் எத்தனை பேர் திரும்பி வேலைக்கு வருவார்கள் என்பது.

ஆனால் நான் இலங்கை செல்வதற்கு சில வாரங்களுக்கு முன் பிரித்தானியாவில் உள்ள பி அன் ஓ நிறுவனம் 850 பணியாளர்களை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் வேலையால் நிறுத்திவிட்டு தொழில் முகவர்களுக்கூடாக குறைந்த சம்பளத்திற்கு ஆட்களை எடுத்தனர். பிரித்தானிய அரசு மிரட்டிப்பார்த்தும் எதுவும் ஆகவில்லை. ஆனால் இலங்கையிலோ அரசு 16 லட்சம் அரச ஊழியர்களை தேவைக்கதிகமாக வைத்து சம்பளம் வழங்குகிறது.

கிளிநொச்சி பகுதியில் பல்வேறு வேலைகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகக் கடினமாகி உள்ளது. ஏனைய நாடுகளைப் போல் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் எரிபொருட்களின் விலை உயர்வாலும் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது என்பது உண்மையே. ஆனாலும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை அவர்களால் சில அசௌகரியங்களுடன் முன்னெடுக்க முடிகின்றது. எரிபொருளே அங்கு முக்கிய சிரமத்தை ஏற்படுத்துகிறது. மின் வெட்டுக்கும் அதுவே காரணம். இதே வகையான பிரச்சினைகளை உலகின் பல நாடுகள் எதிர்கொள்கின்றன. அதில் இலங்கையும் ஒன்று.

2009 ஈவிரக்கமற்ற முறையில் தமிழீழ விடுதலைப் புலிகளை மௌனிக்க வைத்ததால் தமிழ் மக்கள் ராஜபக்ச குடும்பத்தினர் மீது மிகக் கடுப்பிலேயே உள்ளனர். ராஜபக்சக்களின் இனவாதக் கருத்துக்கள் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லீம், கிறிஸ்தவர் தரப்பிலும் மிகக் கடுமையான எதிர்ப்பு உள்ளது. அரசியல் எதிரிகளுக்கு எவ்வித குறைச்சலும் இல்லை. மேற்கு நாடுகளின் கிடுக்குப் பிடிக்குள் விழாமல் இருப்பதால் அந்நாடுகள் ராஜபக்சாக்களை ஒரு வழி பண்ண வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் உள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்தி தவித்த முயல் அடிக்கும் போட்டியில் ஆளுக்கொரு பொல்லுக் கட்டையுடன் பல முதலைகள் கண்ணீர் வடித்தபடி காத்திருக்கின்றன. ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுத கதைதான்.

இலங்கை அரசாங்கம் அதிகம் கடன் வாங்கியதும் நாட்டை அடகு வைத்துள்ளதும் இந்தியாவிடம் தான். தங்களின் இன்னொரு மாநிலமாக இலங்கையை அறிவிக்கவும் தயார் எனப் பகிடி விடும் அளவுக்கு இந்திய அமைச்சர்கள் வந்துவிட்டனர். ஆனால் சீனாவால் தான் தாங்கள் நாசமாய் போனதாக இலங்கை மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியம் ஏதோ இலங்கை மக்களை மீட்க வரவேண்டும் என்ற போக்கில் கதையளப்புகள் நடைபெறுகிறது. சுர்வதேச நாணய நிதியம் இலங்கை மக்களையும் நாட்டையும் பாழங்கிணற்றினுள் தள்ளுவதற்கே வழி செய்யும். 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளும் அதன் காப்ரேட் நிறுவனங்களும் இலங்கையை கொள்ளையிடவும் சுரண்டவும் கதவுகளைத் திறந்துவிட்டது. தங்களுடைய லாபத்திற்காக உள்ளுர் உற்பத்திகளை பலவீனமாக்கி அழித்து இறக்குமதியை ஊக்குவித்தது. அதன் ஒட்டுமொத்த விளைவுகளே இவை. ராஜபக்சாக்களும் ஏனைய ஆட்சியாளர்களும் கொள்ளையடித்தது உண்மைதான். ஊசி போகின்ற அளவு என்றால் இந்த சர்வதேச நாணய நிதியமும் மேற்கு நாடுகளும் இந்தியாவும் அடித்தது உலக்கை போகின்ற அளவு கொள்ளை.

இந்தியா தனது நலனுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தூண்டிவிட்டு கூத்தடித்தது. இப்போது தான் இலங்கை மக்களை காப்பாற்றுதவதாக நாடகம் போடுகின்றது. தன் மக்கள் பட்டினியால் இறக்க, சாதியின் பெயரால் கொல்லப்பட இந்தியா இலைங்கையர்களுக்கு உதவுகின்றதாம். இலங்கை தன்னுடைய கடன்களை செலுத்த முடியாது என்று அறிவித்தால் முதல் பாதிப்பு இந்தியாவுக்குத் தான். அதனால் தான் இந்தியா இலங்கைக்கு முண்டுகொடுக்கின்றது. இலங்கையர்கள் மீதுள்ள அனுதாபத்தால் அல்ல.

நான் இலங்கையில் இருந்து மீண்டும் லண்டன் திரும்பும் போது மாலைதீவி, பஹ்ரெயின் வழியாகவே திரும்பினேன். கொழும்பில் இருந்து மாலைதீவு வரை விமானத்தில் விமானப் பணியாளர்களைத் தவிர நான் மட்டுமே பயணித்தேன். மாலைவீதில் விமானம் நிரம்பியது. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வீழ்ச்சியையே அது பிரதிபலித்தது. நாடு பொருளாதாரத்தில் திண்டாட நாட்டில் பயங்கரமான நிலை நிலவுகின்றது என்ற மாயை சர்வதேச ரீதியில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அதனால் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரவில்லை. பொருளாதராரத்தை ஈட்ட முடியவில்லை. கோவிட் பிரச்சினை மேற்கு நாடுகளால் எண்ணை வாரத்து உக்ரெயினில் வளர்க்கப்படும் போர்த் தீ இலங்கை போன் மூன்றாம் உலகநாடுகளில் பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆனால் இந்தப் பின்னடைவை ஒரு வரப்பிரசாதமாகப் பயன்படுத்தி நாட்டில் சீரான தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் முயற்சிக்க வேண்டும். இலங்கையில் தற்போது 60 வீதம் நிலக்கரி மூலமான மின்சாரமும் 40 வீதம் நீர்வீழ்ச்சி மற்றும் மீள்சக்தி மூலமான மின்சாரமும் பிறப்பிக்கப்படுகின்றது. 60 வீத மின்சார வெட்டுக்குக் காரணம் நிலக்கரியை வாங்குவதற்கு நிதி இல்லாமையே. ஆனால் வெய்யிலும், காற்றும் உள்ள இலங்கையில் மீள்சக்தியூடான மின்சார உருவாக்கத்தை அதிகரித்து மின்சாரத்தில் தன்னிறைவை நோக்கி இலங்கை செல்ல முடியும் என்கிறார் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட பேராசிரியர் அ அற்புதராஜா. அரசு 2030இல் நிலக்கரி : மீள்சக்சி மின்சாரத்தை 60 : 40 இல் இருந்து 40 : 60 மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இவை தொடர்பான பாரிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலையை நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சாதகமாகப் பயன்படுத்தி நாட்டை தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *