நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி புதிய சிந்தனைக்கு அவசியமானது. தவிர்க்க முடியாதது என லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் கிளிநொச்சியில் லிற்றில் எய்ட் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையில் தெரிவித்தார்.
கடந்த பல பத்து ஆண்டுகளாக தேவையற்ற ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்து நூகர்வுக் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கியதன் விளைவே இந்தப் பொருளாதார நெருக்கடி எனத் தெரிவித்த த ஜெயபாலன் மாட்டுப் பாலை குடிக்காமல் அந்தப்பாலை குறைந்தவிலையில் நியூசிலாந்தில் உள்ள நெஸ்டல் கொம்பனிக்கு விற்று கூடிய விலைக்கு அங்கர் பால்பவுடரை வாங்கிக் குடிக்க ஆரம்பித்ததன் முடிவும் தான் இந்நிலைக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.
அவர் தனதுரையில் இச்சான்றிதழ்கள் கற்கையின் முற்றுப்புள்ளி அல்ல என்றும் சேர் ஐசாக் நீயூட்டன் குறிப்பிட்டது போல் நாம் கற்ற ஒரு துளிக்கல்விக்கான அத்தாட்சி மட்டுமே என்றும் கல்லாதது சமுத்திரத்தின் அளவானது என்பதைச் சுட்டிக்காட்டினார். பெறுபேறுகள், சான்றிதழ்கள், பட்டங்கள் அல்ல கல்வி எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது அவற்றையும் கடந்தது எனத் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளாக கிளிநொச்சியில் இயங்கி வரும் லிற்றில் எய்ட் அமைப்பின் 2022ம் ஆண்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி திருநகரில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் ஏப்ரல் 10இல் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 200 பேர் மட்டுமே கொள்ளக் கூடிய மண்டபத்தில் 350 பேர்வரை கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். 250 மாணவர்கள் கணணி வன்பொருள் கற்கை, கணணி மென்பொருள் கற்கை, வடிவமைப்பு, தையல் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் டிப்ளோமா கற்கைகளைப் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.