இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரசாங்கத்திற்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.
அதேபோலத்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியம் உள்ளது.
அதே போல இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையானது விரைவில் சுமுகமான நிலையை எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும். அதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
இலங்கை மக்களை தமிழ் மக்களை தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம்.
தென் இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மைதான். அது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான். ஆனால் சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை ஏதோ ஒரு தவறால் வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.