கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீட்டின் மீது இன்று முற்பகல் பிரதேச மக்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையை தொடர்ந்து நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.
இந்தவகையில் பசிலின் வீடும் தற்பொழுது முற்றுகையிடப்பட்டுள்ளது. பசிலின் வீட்டுக்கு சென்ற மக்கள் கல், மற்றும் பொல்லுகளை பயன்படுத்தி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது, விசேட அதிரடிப்படையினர் அங்கு இருந்த போதிலும் மக்களை தடுக்க அவர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
அரச பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மல்வனை பிரதேசத்தில் மிகப் பெரிய காணி ஒன்றை கொள்வனவு செய்து, அதில் ஆடம்பர வீடு மற்றும் நீச்சல் குளத்தை நிர்மாணித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினர் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்ககது.