பெருந்தோட்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டுத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

sri-lanka-upcountry.jpgநுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்களின் நலன் கருதி கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பொகவந்தலாவை தெரேசியா, கிலானி மோறார் ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தொழிலாளர் தேசிய சங்கத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களை நாம் வழங்கிய போது பெரும் வரவேற்புக் கிடைத்தது. உயர்தர மாணவர்கள் மேலதிக அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் வழங்கிய இந்நூல்கள் தமக்குப் பெரும் பயனை அளித்ததாக எமக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய கல்வி மேம்பாட்டுத்திட்டங்களை நாம் எவ்வித அரசியல் தொழிற்சங்கப் பேதங்களுமின்றியே மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு நூல்களை வழங்கும் திட்டத்தினை இவ்வருடமும் நாம் மேற்கொள்ளவுள்ளோம். இதற்குப் பாடசாலை அதிபர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இன்று வறுமையினால் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதில் கூட மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவுவதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதோடு மலையகத்தின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான உதவிகள் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவியாக அமையும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *