“இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.” என இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”இன அழிப்புப் போரின்போது, மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இசைப்பிரியா போன்றவர்கள் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டனர். பாலச்சந்திரன் போன்ற சிறார்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.
உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு என்பன இன அழிப்புப் போரில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
எனவே, இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும்.
திட்டமிட்ட அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும். தமிழர்களிடமிருந்து தலைவர்களைத் தேடுங்கள், மாறாக முகவர்களைத் தேட வேண்டாம். எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி தீர்வை முன்வைக்கவும்” – என்றார்.