“தவறான வழியில் சென்றாலும் பிரபாகரனின் கீழ் செயற்பட்டு மரணித்த அந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,
இன்று வெற்றி தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், அந்த போரில் பலியான படையினருக்கு நாம் மாியாதை செலுத்துகிறோம். அதேநேரம், தவறான வழியில் சென்றாலும் பிரபாகரனின் கீழ் செயற்பட்டு மரணித்த அந்த இளைஞர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.
இதேவேளை அரசியல் வாழ்க்கையில் நான் அதிகமாக விமர்சித்த ரணில் விக்கிரமசிங்க, இன்று பிரதமராக பதவியேற்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் சர்வதேசத்தில் நற்பெயரைக்கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தின் 225 பேர் செய்ய முடியாத காரியமான சர்வதேச செல்வாக்கை, அவர் பெற்றிருக்கிறார். எனவே அவருக்கு நாடாளுமன்றில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் .நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும்.
இதேவேளை நாட்டில் இன்று சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவில்லை. நாட்டில், இன்று பொதுமக்கள் உணவுக்காக கஸ்ரப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் உணவகம் செயற்படுவது பொருத்தமானது அல்ல. எனவே அந்த உணவகத்தை மூடி விடுமாறும் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்தார். .