நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டமை பாராட்டத்தக்கது என்று காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர் தரப்பில் இருந்த போதிலும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கூறினார். நாட்டுக்கு தற்போதைய சூழ்நிலையில் கட்சி அரசியலா அல்லது மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வா அவசியம் என சகல அரசியல் கட்சிகளும் புரிந்து செயற்பட வேண்டும். மக்கள் வரிசையில் காத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் ரீதியில் பிரிந்து செயற்பட கூடாது என அவர் கூறினார்.
நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் செய்யக்கூடாது. நாட்டை கட்டியெழுப்புவதற்காக சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் சகல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்தாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாகவே தான் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார சூறாவளியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு திறமையான தலைவரினால் மாத்திரம் முடியும் என்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.