உலகை ஆட்டிப்படைக்கும் விலைவீக்கம் – இன்பிளேசன் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை. இரண்டு வீதமாக இருக்க வேண்டிய விலைவீக்கம் பத்துவீதத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. பெற்றோல் மற்றும் எரிவாயுவின் விலைகள் எகிறிவருகின்றது. பொருளாதாரமட்டத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவும் படி தொழிற்கட்சி மற்றும் பொது அமைப்புகள் கேட்ட போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேடிவ் அரசு கடுமையாக மறுத்துவந்தது. இந்தப் பின்னணியில் பிரித்தானியாவின் எரிபொருள் நிறுவனங்கள் வரலாறு காணாத லாபத்தை ஈட்டின. அந்த லாபத்திற்கு கூட்டுத்தாபன வரியை அறவிடும்படி தொழிற்கட்சியும் ஏனைய அமைப்புகளும் சில மாதங்களாகவே கோரி வந்தன. கூட்டுத்தாபன வரியை எரிபொருள் நிறுவனங்கள் மீது விதித்தால் அவர்கள் மாற்று சக்திகளில் முதலீடுவது பாதிக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட மாற்று சக்திகளில் முதலீட்டுக்கு தூண்ட வேண்டும் என்றெல்லாம் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான நிதியமைச்சர் ரிஷி சூனாக்கும் தெரிவித்து வந்தனர்.
ஆனால் இரவோடு இரவாக இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துவிட்டது. இன்று பொருளாதார நிலையில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு மிகப்பெரும் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளனர். வறுமைக்கோட்டில் உள்ள ஒரு குடும்பம் வருடத்திற்கு 1200 பவுண்களை பெறும் அளவுக்கு உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய சொந்தக் கட்சியினரே சோசலிசத்திற்கு இறைச்சியை வீசியெறிவதாக நையாண்டி பண்ணியுள்ளனர். பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இந்த உதவித்திட்டம் இலங்கை அரசியல் வாதிகளின் சம்பள உயர்வு விரிக்குறைப்பையும் விஞ்சியுள்ளது.
உண்மையில் இந்த உதவி மக்களுக்குக் கிடைக்க வழி செய்தவர் சூ கிரே. இவர் தான் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லொக்டவுன் பார்ட்டி’களை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தவர். இந்த அறிக்கை நேற்று மே 25இல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவருடைய சகபாடிகளும் மேற்கொண்ட 20 வரையான பார்ட்டிகள் அம்பலத்துக்கு வந்தது மட்டுமல்ல பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் பொய் சொன்னதும் அம்பலமாகிவிட்டது. இந்த நெருக்கடி நிலையைச் சமாளித்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப, பொறிஸ் அரசு மாபெரும் பல்டி அடித்து எரிபொருள் நிறுவனங்கள் மீது 10 பில்லியன் பவுண்கள் வரை வரி விதித்து அதனை மக்களுக்குப் பகிர முன்வந்துள்ளது. இப்போது பொறிஸ் ஜோன்சன் குடுமியில்லாமலேயே ஆட்டுகின்றார். இங்கு பொறிஸ் ஜோன்சனை பல்டி அடிக்க வைத்த சூ கிரேயுக்கு மிகுந்த பாராட்டுக்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் தொழிற்கட்சியின் தலைவராக இருந்த ஜெரிமி கோபின் தன்னுடைய கடைசி தேர்தலில் வைத்த திட்டங்களை தற்போது பொறிஸ் ஜோன்சன் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். கடைசியாக தன்னுடைய ஊத்தைகளை மறைத்து பேசுபொருளை திசைதிருப்ப எட்டு மில்லியன் மக்கள் வரை பயனடையக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் போட்ட கூத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் நன்மைபெறும் வகையில் சூ கிரேயின் அறிக்கை தகுந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் உக்ரைன் யுத்தத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் முக்கிய நோக்கமும் தன்னுடைய ஊத்தைகளை மூடி மறைக்கவே.
அண்மையில் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பேராசிரியர் ஒருவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் தான் பொறிஸ் ஜோன்சனையும் உருவாக்கியது என்று நக்கலும் நளினமும் கலந்து தெரிவித்ததுடன் லண்டன் ஸ்கூல் ஒப் மனேஜ்மன்ற் எடியுகேஸன் அதனிலும் பார்க்க தரமான பட்டதாரிகளை உருவாக்குவதாகத் தெரிவித்து இருந்தார்.
அண்மைய விலை வீக்கம் காரணமாக இரு பிள்ளைகளையுடைய கணவன் மனைவியை கொண்ட குடும்பத்தின் செலவீனம் 400 பவுண்களால் அதிகரித்துள்ளது. அதன்படி ஆண்டுக்கு 4,800 பவுண்கள் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு அதில் 25வீதத்தையே தர நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது. இந்த சூ கிரேயின் அறிக்கை வந்திருக்காவிட்டால் மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருப்பார்கள்.