நான் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்காரணமாகவே அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, திறமை மிக்கவர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி வருவதாகவும், அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை நியமனம் முழுமை பெறும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
‘அமைச்சரவை நியமனம் முழுமை பெற்றவுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து நான் விலகுவேன் என்று சில ஊடகச் செய்திகளைப் பார்த்தேன். எனினும், நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன். எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை ஓரணியில் செயற்பட்டால்தான் நாட்டுப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.