இந்தியா இல்லாமலேயே ஈரானிலிருந்து குழாய் வழி எரிவாயு – பாகிஸ்தான்

ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை இந்தியாவை விட்டுவிட்டு மேற் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொள்வதாக முன்னர் முடிவு செய்யப்பட்டது.

7500 கோடி டாலர் மதிப்பிலான இத்திட்டத்துக்கு ஈரான் – பாகிஸ்தான் – இந்தியா குழாய்ப் பாதை திட்டம் (ஐ.பி.ஐ) என பெயரிடப்பட்டது. மூன்று நாடுகளும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் ஆஸிப் அலி ஜர்தாரி, முதல் முறையாக ஈரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஈரான் புறப்படுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்திட்டத்துக்கு இந்தியா ஒத்து ழைக்கவில்லை எனில் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார், சுமார் 2600 கி.மீ தொலைவு குழாய்வழி எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான 1994 ஆம்ஆண்டு முன்மொழியப்பட்டது.

ஆனால் மூன்று நாடுகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள், எரி வாயு விலையை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாதது. எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டண நிர்ணயம் (டிரான்ஸிட் ஃபீஸ்) உள்ளிட்டவை காரணமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவது காலதாமதமானது.

தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு அத்தகைய உறுதியையும் ஈரான் அளிக்கவில்லை இதனாலும் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தனது பயணத்தின் போது இத்திட்டத்தை நிறைவேற் றுவது குறித்து ஈரான் அதிகாரிகளுடன் விவாதிக்கப் போவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அகமதி நிஜாத்துடன் பேசுவதோடு இரு நாடுகளிடையேயான பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் போவ தாகக் கூறினார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினை குறித்து விவாதிக்கப் போவதாக குறிப்பிட்ட அவர் ஈரானில் நடைபெறும் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ப போவதாகக் கூறினார்.

இரு நாடுகளும் பயனடையும் வகையில் பலதரப்பு விஷயங்கள் குறித்து ஈரான் ஜனாதிபதியுடன் விவாதிக்கப் போவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார். இம் மாநாட்டுக்கு முன்னதாக சுற்றுச் சூழல் மாநாடும் நடைபெறும்.

இம்மாநாட்டில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஜனாதிபதிகள் பங்கேற்கின்றனர். இதை அடுத்து நடைபெறும் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்படும். இம் மாநாட்டில் அஜர்பெய்ஜான், தஜகிஸ்தான், துருக்கி அதிபர்கள் மட்டுமன்றி இப்பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *