15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ந்திகதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் நேரடியாக காண உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.