நிவாரணக் கிராமங்களில் மாணவர் குறை நிறைகளை கண்டறிய கல்வி அபிவிருத்திக் குழு

school-sri-lanka.jpgவவுனியா மாவட்ட பாடசாலைகள் உட்பட நிவாரணக் கிராமங்கள் இடைத்தங்கல் முகாம்களில் கல்வி பயிலும் சுமார் 30,000 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறைவின்றி வழங்கப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்கும் குறைநிறைகளை நிவர்த்திக்கும் நோக்குடனும் கல்வி அபிவிருத்திக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமங்கள் உட்பட இடைத்தங்கல் முகாம்களுக்கு தினமும் சென்று கல்வி நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே மேற்படி குழுவின் பிரதான நோக்கம் என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் நிவாரணக் கிராமங்களில் இடம்பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்களுக்குரிய பெப்ரவரி மாத கொடுப்பனவுகளையும் வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் வழங்கியுள்ளது.

நிவாரணக் கிராமத்தில் 1147 மாணவர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 7964 மாணவர்களும், வவுனியா மாவட்ட மாணவர்கள் 20,000 பேரும் கல்வி பயில்கின்றனர்.

எல்லாவற்றையும் இழந்த நிலையில் வந்துள்ள மக்கள் கல்விச் செல்வத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் 379 இடம்பெயர்ந்துவந்துள்ள ஆசிரியர்களின் உதவியுடன் கற்பித்தல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக பிரதம லிகிதர் எஸ். எம். ஜவாத் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக உபயோகிக்கப்பட்டு வருவதால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 20,000 மாணவர் கள் கல்வி பயிலும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவிலுள்ள பொதுக் கட்டடங்கள் பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், காலை முதல் மாலை வரை மூன்று பிரிவுகளாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆரம்ப பிரிவு வகுப்புகளும், காலை 11.30 முதல் பிற்பகல் 2.00 மணிவரை இடைப் பிரிவு வகுப்புகளும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 4.00 மணி வரை உயர்தர வகுப்புகளும் நடத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *