இன்று யூன் ஆறாம் திகதி சில நிமிடங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தப்பித்துக்கொண்டார். ஆனால் அவருடைய எதிர்காலம் மிகக் குறுகியதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆளும் கொன்சவேடிவ் கட்சியின் 359 பாராளுமன்ற உறுப்பினர்களில் 211 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 148 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கையிலை என வாக்களித்தனர். ஆட்சியில் உள்ள தங்களுடைய பிரதமருக்கு எதிராக அவர்களுடைய கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அக்கட்சியை தலைமை தாங்குவதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளார்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பொறுப்பற்ற தலைமைத்துவம் அவருடைய குடியும் கும்மாளமும் பற்றி தேசம்நெற் தொடர்ச்சியாக விமர்சித்துவந்ததுடன் வாக்காளர்களிடம் நம்பிக்கையிழந்து வந்ததை சுட்டிக்காட்டி இருந்தோம். இன்று பிரதமர் 32 வாக்குகளால் பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனால் நீண்டகாலத்திற்கு இவரால் பதவியில் நீடிப்பது மிகக் கடினமாக இருக்கும். மே 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேரதலில் ஆளும் கொன்சவேடிவ் கட்சி கணிசமான ஆசனங்களை இழந்ததால் பொறிஸ் ஜோன்சன் தலைமையில் அடுத்த தேர்தலை எதிர்கொண்டால் தாங்கள் தோற்றுப் போவோம் என பல கட்சி உறுப்பினர்களும் கருதுவது தான் அவர்கள் இவ்வாறான சடுதியான தாக்குதலை நடத்த காரணமாக இருந்தது.
இன்னும் இரு வாரங்களில் இரு இடைத்தேர்தல்கள் வருகின்றது. இத்தேர்தல் முடிவுகள் கட்சிக்கு எதிரானதாக மாறினால் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலம் இன்னும் ஆபத்தானதாகும்.
முன்னாள் பிரதமர் திரேசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் பெற்ற நம்பிக்கை வாக்குளிலும் குறைவான வாக்குகளையே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இப்போதைய நம்பிக்கையிலாப் பிரேரணையில் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வாக்குகளைப் பெற்ற போதும் கணிசமான எதிர்ப்பின் காரணமாக அவரால் தொடர்ந்தும் பிரதமராக செயற்பட இயலாமல் போனமையினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏழு மாதங்களில் பதவியை இராஜிநாமச் செய்தார். பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவ்வாறு பதவியை இராஜினாமாச் செய்யும் இயல்புடையவரல்ல. ஆனாலும் அவருடைய எதிர்காலம் முடிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக தன்னை முன்னிலைப்படுத்தும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பிரதமர் பொய் சொல்லி இருக்கின்றார். லொக்டவுன் அறிவித்து நாட்டுமக்களை வீட்டுக்குள் இருக்கச்செய்ய விதிமுறைகளை அறிவித்து விட்டு அந்த விதிமுறைகளை மீறி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லாமான 10 டவுனிங் ஸ்ரீற்றில் அதிகாலை மூன்றுமணிவரை கூத்தும் கும்மாளமும் என்று இருபது தடவைகள் பார்ட்டி நடந்துள்ளது. அவ்வாறு நடக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் பொறிஸ் பொய்யுரைத்தார். இதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் பிரதமருக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எதிராக அபராதாம் விதித்தது. சூ கிரேயின் சுயாதீனா விசாரணை அறிக்கையும் பல விடயங்களை அம்பலப்படுத்தியது தெரிந்ததே.
உக்ரைனுக்காகக் குரல்கொடுத்ததுஇ உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது, உக்ரைன்னுக்கு பறந்து சென்றதெல்லாம் லண்டனில் தனது இருப்பை தக்க வைக்கவே. பெரியளவிலான எரிபொருள் கொடுப்பனவை வழங்க முன் வந்ததும் தனது பொட்டுக்கேடுகளை மறைக்கவே.அது போதாது என்று தானே அறிமுகப்படுத்திய அமைச்சர்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளையும் கிழித்தெறிந்தார். அதாவது அமைச்சர்கள் தவறுவிட்டால் பதவிவிலகவேண்டும் என்ற விதியை நீக்கிவிட்டார். தனது தவறுகளுக்காக தான் பதவி விலகவேண்டி வரும் என்பதால். போறிஸ் ஜோன்சனாக இருந்தாலும் முழப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா?