எதிர்வரும் ஒரு வருடத்திற்கு தமக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் பணியாற்ற அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அமைச்சர்கள் ஒரு வருட காலத்திற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளாதிருக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்ததாக அவர் கூறுகின்றார்.
”இலங்கையின் நாளொன்றின் வருமானம் 4 பில்லியனமாக காணப்படுகின்றது, நாளொன்றின் செலவீனமாக 9.6 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
இதனால், நாடு நாளாந்தம் பாரியளவிலான நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. இதனை கருத்திற் கொண்டு, எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு அனைத்து அமைச்சர்களும் சம்பளத்தை பெற்றுக்கொள்ளாதிருக்கும் வகையில், பிரதமரினால் அமைச்சரவை பத்திரமொன்று நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்தனர்” என பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.