பெருந்தோட்ட பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்திற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான பிரதமரின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரதமரின் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் பாராளுமன்றத்தில் அதனை தெரிவித்துள்ள போதும் அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு இல்லாவிட்டால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை ஏமாற்றி விடும் என்று குறிப்பிட்ட அவர், உதாரணத்துக்கு தொழிலாளர்கள் தமது வீட்டை ஒரு அடி நகர்த்தி கட்டினாலே வழக்கு, வேலை நிறுத்தம் என தோட்ட நிர்வாகம் புறப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனைக் கருத்திற்கொண்டு தோட்ட நிர்வாகத்துக்கு முறையாக அறிவிக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அவ்வாறு காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், ஏனைய விவசாயிகளுக்கு வழங்க தீர்மானித்துள்ள வங்கிக் கடனை அறவிடாமல் விடும் சலுகையை தோட்டப் பகுதி விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.