சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவது எளிதான விடயம் அல்ல” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,
கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு நாளை அல்லது நாளை மறுதினம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வருகின்றார்கள். ஆனால் ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகும்.
கடன் பெறுவதென்றால் சர்வதேச நாணய சபை அனுமதி வழங்க வேண்டும். அதைச் செய்ய நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. நிதி நிர்வாகத்தை மாற்ற வேண்டும். அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கடன் மறுசீரமைப்பைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அது எளிதானது அல்ல.
முன்னைய அரச தலைவர்களின் நடவடிக்கைகள் காரணமாகவும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அவர்கள் தவறான முடிவுகளை எடுத்தார்கள் அதுவே தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு காரணம்.
எங்களுக்குப் பின் வந்த பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகள் உலகத்துடன் இணைந்து ஏற்றுமதி செய்து முன்னேறிய போது நாம் என்ன செய்தோம் ?
மத்திய கிழக்கு நாடுகள் கூட இலங்கைக்கு உதவ தயாரில்லை. தற்போதைய சூழ்நிலையில் கூட சவுதிஅரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் இலங்கைக்கு உதவிவழங்க தயாரில்லை.
நாம் நம் நாட்டைச் சுற்றிச் சுவர்களைக் கட்டினோம், வரிகளை நிறைய உயர்த்தினோம், உலகில் சேர வேண்டிய சில வாய்ப்புகளை இழந்து உலகை விட்டு வெளியேறினோம். அனைத்து நாடுகளுடனும் மோதிக் கொண்டிருக்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும்.அதற்கு முன் பணம் பெற முடியாது.
கடன் குறித்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். அநேகமாக அதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.
ஆனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பணம் பெற முடியாது. பணத்தைப் பெறுவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் தேவை. அதைச் செய்ய நிறைய வேலைகள் தேவைப்படும்.
அதாவது நிதி நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எளிமையாகச் சொன்னால், அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்தக் கடன்களை மறுசீரமைக்கும் ஒரு நேர்மறையான திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும். அது எளிதானது அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.