இலங்கைக்கான சீனத் தூதுவர் சியூபிங் யென்ங், அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளைச் சந்தித்துப் பேசினார். கண்டியிலுள்ள அஸ்கிரிய, மல்வத்த விகாரைகளில் இந்தச் சந்திப்பு நேற்று இடம் பெற்றது.
இலங்கை – சீனா இரு நாடுகளினதும், நட்புறவை மேலும் வலுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இலங்கைக்கான சீன நாட்டு புதிய தூதுவர் சியூ பிங் யென்ங் உறுதியளித்துள்ளார். இலங்கை மற்றும் சீன நாட்டு உறவுகளை பலப்படுத்தும் முகமாக இரு நாடுகளிலுமுள்ள வாலிப பெளத்த மத குருமார்களை இலங்கையிலிருந்து சீன நாட்டுக்கும் சீன நாட்டிலிருந்து இலங்கைக்கும் அனுப்புவதன் மூலம் எமது இரு நாடுகளுக்குரிய உறவுகளும் பலப்படுத்துவதற்கு ஒரு பிரதான காரணமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் புத்தபெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுகளிக்க வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை என்னால் அவதானிக்கின்ற பொழுது இந்த நாட்டு பெளத்தர்கள் பெளத்த மதம் மீது வைத்திருக்கும் அன்பையும் ஆதரவையும் என்னால் மிக தெளிவாக உணரக் கூடியதாக இருக்கின்றன.
இன்று இலங்கை பெளத்தர்கள் மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து பெளத்தர்களும் ஸ்ரீதலதா மாளிகையையும் அதன் போதனைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது போல் நானும் இச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்திருப்பது பெரும் அதிர்ஷ்டத்திற்குரிய ஒருவராக இருக்கின்றமை குறித்து மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.
சீனாவில் உள்ள பீஜிங் நுவர லீ குவான் விகாரையிலும் புத்த பெருமானின் புனித தந்தமொன்று உள்ளது. அதனை தரிசிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2007 இல் வந்ததை முன்னிட்டு இலங்கை – சீன நட்புறவு மேலும் வலுவடைந்ததையும் நான் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளுக்கு கூட இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் உற்சாகம் காட்டி வருவதையும் என்னால் அறிய முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.