இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழப்பு, அவலங்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைஸுக்கும் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக இழுபறிபடும் அரசியல் தீர்வை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், டொம் லான்டொஸ், மனித உரிமைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணி வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழு உறுப்பினரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொன் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.