வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றப்படுவதையிட்டுத் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் தலைவரான கண்டி ஆயர் பேரருட்திரு. வியான்னி பர்னாண்டோ தெரிவித்தார். செட்டிக்குளத்திலுள்ள மனிக் பாம் நலன்புரி நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கு வீட்டு வசதிகள் செய்து கொடுத்திருப்பதையிட்டுத் தாம் திருப்தியடைவதாகவும் தெரிவித்தார்.
அங்கு விஜயம் செய்த ஆயர் குழுவை நலன்புரி முகாமில் வவுனியா அரசாங்க அதிபர் ஜி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். முகாமைப் பார்வையிட்ட குழு அங்கு இடம்பெயர்ந்த மக்களுக்குp போதிய வசதிகள் அளிக்கப்பட்டிருப்பதையும் அவதானித்தது. விடுதலைப் புலிகளின் கட்டப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 88,000 மக்கள் 14 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்து தரப்பட்டிருப்பதோடு தொழிற்பயிற்சி நெறிகள, மாணவர்கள் கற்பதற்கேற்ற பாடசாலை வசதிகளுடன் சிறுவர்களுக்கான முன்பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் பார்வையிட்ட ஆயர் குழு, “அரசாங்கத்துக்குத் தான் நன்றிகூற வேண்டும்;” என்று கூறினர். வன்னியில் தாம் அச்சத்துடனேயே வாழ்ந்ததாகவும் தற்போது இங்கு சந்தோமாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்ததாக கண்டி ஆயர் தெரிவித்தார். “இத்தகைய சூழ்நிலையில் நாம் முதல் தடவையாக இங்கு விஜயம் செய்துள்ளோம். இடம்பெயர்ந்து வந்த மக்கள் இன்று சந்தோமாக இருக்கின்றனர். பிள்ளைகளும் பாடசாலை செல்ல வாய்ப்பேற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இம்மக்களுக்கு வழங்கிவரும் வசதிகளையிட்டு நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றும் அவர் கூறினார்.