முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு குழப்ப நிலை ஏற்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருக்கும் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கும் இடையிலேயே இன்று இரவு 8.00 மணியளவில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடு தீவிரமடைய, பொதுமக்களால் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயேகம் மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து அப்பகுதியில் குழப்பமான நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
…………………………………………….
முல்லைத்தீவு பகுதியில் மட்டுமன்றி இலங்கையின் பல பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கின்றது. அரசு தனது கையாளாகாத தனத்தை இராணுவத்தையும் – பொலிசாரையும் கொண்டு மூடி மறைக்க முற்படுகிறது.
மக்களின் கோவம் நியாயமானதே. இதை அரசு புரிந்து கொள்வதாக இல்லை.
தென்னிலங்கையிலும் – வட இலங்கையிலும் இராணுவத்தை கொண்டு மக்களின் கோவத்தை அடக்க அரசு முயல்கிறது. தொடர்ந்து பல கைதுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இது இன்னும் ஒரு கலவரத்துக்கு மக்களை தூண்டும் என்பதே உண்மை. கைகளில் துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டதால் இந்த இராணுவமும் பொலிசாரும் என்னமும் செய்துவிடலாம் என்ற நினைப்பு மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.