இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் நேற்று விடுக்கப்பட்ட அறிக்கை தவறானது என இலங்கை மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது..
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் அண்மைக்காலமாக 2800 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் 7000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டி இருந்தார். இந்த கூற்று தவறானது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் எமது நாட்டு தூதுவருடன் கலந்தாலோசித்து இருக்கலாம். கடந்த மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற கூட்டத்தொடருக்கு நான் கலந்து கொண்ட சென்ற வேளையில் ஐ. நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பில் விளக்கமளித்தேன் அப்பொழுது கூட அவர் இது தொடர்பில் எவ்வித கலந்தாலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. இது ஒரு தலைபட்சமாக விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை ஆகும்.
இந்த அறிக்கையை வெளியிடமுன் இலங்கை மனித உரிமை தொடர்பான இலங்கைக்கான பிரதிநிதி ஒருவரும் உள்ளார் அவராவது இவ்விடயம் தொடர்பில் எம்முடன் கலந்தாலோசித்து தகவல்களை பெற்றிருக்கலாம். கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக 2224 நோயாளர்கள் வன்னியிலிருந்து திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.அவர்களுக்கு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது அவர்களுடன் 971 பொது மக்களும் அழைத்து செல்லப்பட்டார்கள். இதை அவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.சிறுவர்களை விடுதலைப்புலிகள் படையில் சேர்த்துள்ளனர் இது சர்வதேச யுனிசெப் நிறுவனமும் அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தது.
மேலும் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட வலையத்தினுள் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் ஏதேனும் நடைபெறவில்லை என சர்வதேசத்த்திற்கு இராணுவ தளபதி,பாதுகாப்பு செயலாளர் மற்றும் அரசினால் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பயங்கரவாதத்திலிருந்து சிலியன்களை பாதுக்காப்பதே எமது நோக்கம் அதற்காகவே நாம் பயங்கவாதத்திற்கு எதிராக படை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். சிலியன்களை கொல்வது எமது நோக்கம் அல்ல எனவே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையை நாம் மறுக்கிறோம் என இலங்கைக்கான மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.