பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள 2022ம் ஆண்டுக்கான கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்குபெற்றும் குத்துச்சண்டை அணியில் கிளிநொச்சியைச் சேர்ந்த வீரர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ள பயணமாகவுள்ளார்.
இவர் தேசியப் போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக்கொடுத்துள்ளதுடன், இராணுவ அணிக்காக விளையாடி தேசிய அணியில் இடம்பிடித்திருந்தார்.
குடும்ப நிலையை கருத்திற்கொண்டு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்த இவரின் அதித திறமை காரணமாக இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பல தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டியதுடன் கொமன்வெல்த் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இப்போட்டியானது எதிர்வரும் ஜூலை மாதம் 28ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 08 ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறும் வீரர்கள் ஒலிம்பிக் தகுதிக்காண போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்களை பெறவுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் பங்குகொள்ளும் குத்துச்சண்டை அணியில் இடம்பிடித்த இலங்கைத் தமிழர் என்ற செய்தியை உலகறிய செய்வதுடன், நாட்டிற்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து கொடுப்பதே தனது இலட்சியம் என அவர் தெரிவிக்கின்றார்.
தனது சாதனை பயணத்திற்கு சகோதரியும், பெற்றோருமே காரணம் என தெரிவிக்கும் அவர், இதுவரை எந்த அரசியல்வாதியும் திரும்பி பார்த்ததில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த பயணம் வரை பயிற்சிக்காக வாகன டயர் ஒன்றையே பயன்படுத்தி வருவதாகவும், தொடர் முயற்சியே இலக்கை அடைய வழி வகுப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அண்மையில் கிளிநொச்சியில் இருந்து சதாசிவம் கலையரசி எனும் வீராங்கனை 19வயதுக்கு கீழ்ப்பட்ட மகளிர் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.