எரிபொருள் நெருக்கடி காரணமாக ரயில் நிலைய அதிகாரிகள் (SMs) மற்றும் இளநிலை ஊழியர்கள் பணிக்கு வராததையடுத்து கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறைக்கு (KKS) புறப்படவிருந்த ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோட்டையிலிருந்து காலை 6.35 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட வேண்டிய உதயதேவி எக்ஸ்பிரஸ் ரயிலும், 6.05 மணிக்கு காங்கேசன்துறைக்குக்கு புறப்பட வேண்டிய யாழ்தேவி ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நேற்று இரவு 9.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி புறப்படவிருந்த ரயில் சேவையும் கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தால் இரத்து செய்யப்பட்டது. நேற்றிரவு திடீரென ரயில்கள் இரத்து செய்யப்பட்டமை குறித்து ரயில் நிலைய ஊழியர்கள் மீது பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இன்று மேலும் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.