களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்க விரும்புவதாகவும் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். மாணவர்கள் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்த பின்னரே அதனை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
அண்மையில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து பல்கலைக்கழக மண்டபம், விஞ்ஞான கூடங்கள் போன்ற பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு 7 இலட்சம் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனைத் திருத்துவதற்கு காலம் எடுப்பது மீண்டும் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கமுடியாதிருப்பதற்கு ஒரு காரணமாகும்.
இந்த சேதங்களை ஏற்படுத்தியவர்களிடம் இருந்து இந்த நஷ்டத்தைப் பெறுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. இச்சம்பவத்தில் மாணவர்கள் நடந்து கொண்டமை, அவர்களின் நடத்தைகள் குறித்து பெற்றோருக்கு தெளிவு படுத்தியுள்ளோம். மாணவர்களின் இந்தப் பிரச்சினைக்கு பெற்றோர்களே பொறுப்பு எனவும் கூறியுள்ளோம்.
மாணவர்களிடையேயான மோதல்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை எனவும் துணைவேந்தர் கூறினார். எனவே மாணவர்கள் மீண்டும் மோதல்களில் ஈடுபடாதிருக்கவேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.