யுத்தத்தில் முனைப்புக்காட்டுமளவுக்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் அக்கறை செலுத்தவில்லையென பிரிட்டிஷ் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸிடம் சுட்டிக்காட்டியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இதன் காரணமாக சிறுபான்மைச் சமூகங்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் அழைப்பின் மீது இங்கு வந்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ், நேற்று முன்தினம் மாலை ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவைச் சந்தித்தவேளையிலேயே ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
ரவூப் ஹக்கீமுடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தவிசாளரும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகுதாவூத், அரசியல் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த லியம் பொக்ஸ், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் குழுவிடம் கேட்டறிந்து கொண்டார். நாட்டின் தற்போதைய அரசியல் கள நிலைமைகளை லியம் பொக்ஸிடம் விளக்கிக்கூறியதாக தெரிவித்த ரவூப் ஹக்கீம், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் இந்த அரசினால் கவனத்தில்கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.
அரசாங்கம் யுத்தத்தின் மீதே கூடுதல் முனைப்புக்காட்டுவதாகவும் தென்னிலங்கையில் யுத்தவெற்றியை காட்டி பெரும்பான்மை சமூகத்தை தவறானபாதையில் இட்டுச்செல்ல முனைவதாகவும் குறிப்பிட்ட அவர், அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதில் எந்தவிதமான அக்கறையையும் காட்டமுற்படவில்லையெனவும் அரசுக்கு அரசியல் தீர்வில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் ஹக்கீம் லியம் பொக்ஸிடம் எடுத்துக்கூறியுள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தாமல் மீளக் குடியமர்த்துவதில் அரசு கவனம் செலுத்துவதாகவும் இதன் பின்விளைவுகள் குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாகவும் இதற்கு உரிய தீர்வைக் காண்பதில் அரசு கவனம் செலுத்தத் தவறிவருவதாகவும் ரவூப் ஹக்கீம் லியம் பொக்ஸிடம் எடுத்துக் கூறியுள்ளார். இச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
palli
இதை நாம சொன்னா எம்மையும் புலியுடன் இனைத்து பேசுகின்றனர். அஸ்ராப் இந்த செய்தியை பற்றி என்ன சொல்லுவார்.
murugan
திடீர் என புலியும் அரசும் கட்டிப்பிடித்துக் கொண்டு தேனிலவுக்கு போனாலும் போவார்கள்.