மோதல் நடைபெறும் பகுதிகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் எதுவிதமான திட்டங்களையும் முழுமையாக மேற்கொள்ளவில்லையென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே இவ்வாறு கூறிய அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்;
மோதல் நடைபெறும் பகுதிகளில் பணியாற்றிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை விளக்கும் படங்களை பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளன. இவ்வாறு விளம்பரப் படங்களை காட்சிப்படுத்துவதை மட்டுமே இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் பணியாகக் கொண்டிருந்தனவே தவிர, செயல்திட்டங்கள் எதனையும் பூரணப்படுத்தவில்லை.
ஆனால் மனிதநேயப் பணிகள், விளையாட்டு மைதானப் புனரமைப்புகள், சனசமூக நிலையப் புனர்நிர்மாணம் என்பனவற்றிற்காகப் பெருந்தொகைப் பணத்தினை இவ்வமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. இவ்விடயம் தொடர்பாகவும் இலங்கையில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளரை தலைவராகக் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது எதிர்காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடும். அதேவேளை, பொதுமக்களின் பாவனைக்காக ஏ9 வீதியைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் வீதியைத் திறப்பதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படுமெனவும் தெரிவித்தார்.