இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியிலும் இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பங்குதாரர்களாக உள்ளடங்கியிருக்க வேண்டும் என ஆறு தமிழ் கட்சிகள் இணைந்து சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச நாணயநிதியத்தின் கொழும்பு அலுவலகம் மூலமாக இது தொடர்பான கடிதம் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளுக்கு கைளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர் முன்னாள் நீதியரசர். சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா ஆகியோரே கூட்டாக இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு முறையான நிதிப்பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் குறுகிய நோக்குடைய அரசியல் கொள்கைகளை பின்பற்றி வருகின்றமை, அடிப்படையில் காரணமாக அமைவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
போரின் பின்னரும் இலங்கையின் முப்படைகளுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளமை குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பேரினவாத தேசிய கொள்கைகள் முழுமையாக மாற்றப்பட வேண்டும், புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கு உறுதிப்பாடுகள் தேவை, ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நாட்டை வழிநடத்துவதற்கான தகுதிகள் இல்லை என்பனவும் குறித்த கடிதத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.
இலங்கையின் இக்கட்டான நேரத்தில் உதவி செய்யத் தயாராக உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களாகிய தாம், கலந்துரையாடலில் ஈடுபடத் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.