கார்ள்மார்க்ஸ் அரசு பற்றி குறிப்பிடும் போது “இந்த அரசும் அரச கருவிகளான இராணுவமும் – காவல்துறையும் முதலாளிகளையும் – ஆளும் வர்க்கத்தையும் பாதுகாப்பதற்கானதே தவிர மக்களை பாதுகாப்பதற்கானது அல்ல.” என குறிப்பிடுகின்றார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் கூட இது அரங்கேறிவருகின்றது. இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் வருகின்றது.
இது இலங்கையில் எத்தனை காலம் கடந்து தென்னிலங்கையும் உணர ஆரம்பித்துள்ளது.
இன்று இலங்கை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட காணொளி ஒன்றை பற்றியதே இந்த பதிவும்.
குறித்த காணொளியில் இராணுவ உயர்நிலை அதிகாரி ஒருவர் பெட்ரோல் செட்ல் பெட்ரோல் பெற வந்த போது அவரை தனது காலால் ஓங்கி உதைத்து விழுத்துகின்றார்.
இங்கு இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படவேண்டியவை.
01. சாதாரண மக்களை பாதுகாக்க தானே இந்த இராணுவம் பாதுகாப்பு எல்லாம். இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது..?
02.இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்க கூடிய பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகளிலேயே மக்களுக்கு இந்த நிலை என்றால் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் இந்த இராணுவ அதிகாரம் எத்தனை வன்முறையான தாக இருக்கும்..?
இந்த இரண்டு விடயங்களும் மிக ஆழமாக நோக்கப்பட வேண்டியவை. இதே இராணுவ வீரர்கள் தானே 2009 லும் சரி இன்று வரையும் சரி உதைத்து வீழ்த்தப்பட்ட அந்த பிரஜையின் மக்கள் குழுவின் ஹீரோக்களாக மதிக்கப்பட்டவர்கள். இன்று இந்த இராணுவத்தின் உண்மை முகத்தை பெரும்பான்மை சமூகத்து மக்கள் நேரடியாகவே புரிந்து கொண்டுள்ளனர். இதனையே பல சிங்கள சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டும் – குறிப்பிட்டும் வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியாகிருந்த ஒரு கார்ட்டூன் படம் கூட சிங்கள கார்ட்டூன் ஓவியருடையதேயாகும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இதனை ஒரு நகைப்பான விடயமாக பதிவிட்டு 69லட்சம் ஓட்டுக்களை நீங்கள் தானே கொடுத்தீர்கள். வாங்கி தொலையுங்கல். ஆனந்தமாக உள்ளது என கூறி பதிவுகளை இட்டுள்ளனர்.
உண்மையிலேயே நாம் எந்தளவுதூரத்திற்கு அரசியல் மயப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பதையே இது காட்டுகிறது. அரசபயங்கரவாதமும் – அரசு வன்முறையும் இராணுவத்தின் ஊடாக யார் மீது பாய்ந்தாலும் அது தவறே. அதை கண்டிக்க வேண்டியதும் அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியதும் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் நம்மைப் போன்ற சிறுபான்மை இனங்களின் கடமையாகும். அண்மையிலும் இது போலத்தான். ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மார்பகங்கள் தெரிந்துவிட்டன என தமிழ்தேசிய அரசியல் பேசும் பலர் நகைப்புக்குள்ளாக்கி கூவித்திரிந்தனர். இதே நாம் தான் இறுதிப்போரில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான தமிழ்ப்பெண்களுக்காக நீதி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அடக்குமுறைகள் யார் மீது பாய்ந்தாலும் எதிர்த்து குரல் கொடுப்போம். அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.
இந்த சந்தர்ப்பம் ஒரு வகையில் தென்னிலங்கை சமூகத்துக்கு வட-கிழக்கில் இந்த இராணுவத்தின் கோர முகம் எத்தகையதாய் இருக்கும் – இருந்திருக்கும் என்பதை உணர்த்தியிருந்தால் – இதை அவர்கள் உணர்ந்து கொண்டால் இன்னமும் ஆரோக்கியமான புரிதல் இலங்கையின் இனங்களுக்கு இடையில் வளரும்…!