கந்தளாயில் தமக்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு கோரி இராணுவத்தினருடன் பௌத்த துறவியொருவர் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (4) இரவு 7.30 மணியளவில் கந்தளாய் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கந்தளாயில் உள்ள மெதகம விகாரையின் விகாராதிபதி ஒருவரே இவ்வாறு எரிபொருள் நிரப்புமாறு கோரி இராணுவத்தினருடன் ரகளையில் ஈடுபட்டார்.
பௌத்த துறவி தினமும் எரிபொருள் நிரப்புவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, எரிபொருள் நிரப்பமுடியாது என தெரிவித்ததையடுத்தே பௌத்த துறவி ரகளையில் ஈடுபட்டார்.
தமக்கு எரிபொருள் நிரப்ப முடியா விட்டால் இராணுவத்தினருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இராணுவத்தினருக்கு கடுமையான வார்த்தை பிரயோகங்களை பௌத்த துறவி மேற்கொண்டார்.
இதனையடுத்து பொலிஸார் துறவியை சமாதானப்படுத்தி எரிபொருள் நிரப்பினார்கள். வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் பௌத்த துறவியின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்தார்கள். இதனையடுத்து பௌத்த துறவி புறப்பட்டு சென்று விட்டார்.
………………………………….
இலங்கையின் எல்லா பகுதிகளிலும் பெற்றோலுக்கான தட்டுப்பாடு காரணமாக பல கிலோமீட்டர்கள் நீளத்துக்கு வரிசைகள் காணப்படுகின்றன. பல இடங்களில் மக்கள் 5 – 10 நாள் வரை காத்திருந்து 2 லீட்டர் பெற்றோல் பெறும் துர்பாக்கியமான சூழல் காணப்படுகின்றது. மேலும் பல இடங்களில் பல நாட்களாக தொடரும் பெட்ரோல் கரிசையால் 10க்கும் அதிகமானோர் இறந்து போன சோகங்களும் அரங்கேறியுள்ளன.
மக்கள் கால் கடுக்க – மனது வலிக்க நீண்ட வரிசையில் நின்றும் கிடைக்காத இந்த பெட்ரோல் ஆளும் வர்க்கத்தினருக்கும் – சமய குறிப்பாக பௌத்த பிக்குகளுக்கும் – காவல்துறையினர் , அரச ஊழியர்களுக்கு இலகுவாக கிடைத்துவிடுகிறது. பொலிஸார் தம் இஷ்டத்துக்கு ஏற்ப பெட்ரோலை பதுக்குகின்றனர். மேலும் பல அரச ஊழியர்கள் தமது தேவைக்கு மட்டுமன்றி தமது உறவினர்களின் தேவை தொடங்கி பல தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை பயன்படுத்தி அடுத்தடுத்து – அடிக்கடி வந்து பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.
பாவம் சாதாரண மக்கள் ஏன் என்றும் கேட்க முடியாமல் – என்ன செய்வதென்றும் தெரியாமல் கால்கடுக்க காத்து நின்று மன உளைச்சளைடைவது மட்டும் தான் மிச்சம். இதே நேரம் தமது அலுவலகங்களுக்கு சாதாரண மக்கள் வரும் போது மட்டும் வரிசையில் நில்லுங்கள் – அமைதியாக இருங்கள் – என சட்டம் – ஒழுங்கு பற்றி பேசும் உத்தியோகத்தர்களின் ஒழுக்கம் என்பது எப்படியானது என்பதை இந்த பெட்ரோல் வரிசைகளுக்கு சென்று பார்த்தால் தெரிந்து விடும். நான் உயர் அதிகாரி என்னை முன்னுக்கு விடுங்கள் என கூறும் அதிகாரி ஒரு பக்கம் – நான் தான் இந்த பிரதேசத்தின் பிரதான அதிகாரி எனக்கு முதலில் பெட்ரோல் நிரப்புங்கள் என கூறி மக்கள் நீண்ட நேரடமாக காத்து நிற்கும் வரிசைக்கு நடுவில் நுழைந்து பெட்ரோல் நிரப்பும் அளவிற்கு இந்த அரச அதிகாரிகளின் மனோநிலை பூச்சிய அடைவில் உள்ளது என்பதே சோகம்.
அதே வரிசையில் எனக்கு முன்பு கத்தரிக்காய்களை மூடையாக கட்டிக்கொண்டு நின்ற அந்த விவசாயி எவ்வளவு கேட்டும் ஒரு லீட்டர் பெட்ரோல் கொடுக்க அங்கிருந்த காவல்துறையினரோ – பெட்ரோல் செட் ஊழியர்களோ யாரும் முன்வரவில்லை. பொறுமையிழந்த அந்த முதுமையான விவசாயி பைக்கை உருட்டிக்கொண்டே சந்தைக்கு சென்றுவிட்டார்.
நாளாந்தம் உண்பதற்கு சோறு போடும் விவசாயம் அத்தியாவசியமா – இந்த அரசாங்க அதிகாரிகள் வேலையே செய்யாது தேய்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்காலிகள் அத்தியாவசியமானதா என்றே தெரியவில்லை. இந்த அரச அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்யாததும் கூட இன்றைய நாட்டின் சீர்கேட்டுக்கு ஒரு காரணம்.
இந்த லட்சணத்தில் தான் ஒரே நாடு ஒரே சட்டம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.