பிரபாவுக்கு ஒரு திறந்தமடல் – சங்கரி

anada_sangari.jpgஉமது கட்டுப்பாட்டின் கீழ் நீர் வைத்திருக்கும் 81,000 குடும்பங்களைச் சேர்ந்த, மூன்று இலட்சத்து முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் சாபம் உம்மை நிம்மதியாக வாழவிடாது. உம்மையும் உமது சந்ததியினரையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்றும் உம்மை தொடர்ந்து ஆதரிப்பவர்களையும், அவர்களின் சாபம் விட்டுவைக்காது. இப்போதாவது உமது மனதை மாற்றி நீர் தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யும்படி கேட்கின்றேன். அம்மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு முழுப்பொறுப்பையும் நீரே ஏற்கவேண்டும்.

என்னசெய்வது என அறியாது உமது தற்போதய இருப்பிடம் தெரியாதமையால் இதை ஓர் பகிரங்க கடிதமாகவே எழுதுகின்றேன். இக்கட்டத்திலேனும் நீர் உருவாக்கிவைத்த சிலவற்றையேனும் மாற்றியமைக்க முடியாதாவென கேட்க விரும்புகின்றேன். வழமைபோல் இதற்கும் உம்மிடமிருந்து எதுவித பதிலையும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் நீர் இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மக்களை காப்பதற்கு, உறுதியான சில நடவடிக்கைகளை எடுப்பீர் என நான் உண்மையாக நம்புகின்றேன். நல்ல எண்ணத்துடன் என்னால் எழுதப்பட்ட கடிதங்களை, அவற்றில் அனேகமானவை உம்முடைய உமது போராளிகளுடைய நடவடிக்கைகளை கண்டித்திருந்தும், அவற்றை நீர் பாரதூரமாக கருதாதமை துர்பாக்கியமே.

இவ்வாறு செய்வதற்கு எனக்கு எதுவித சுயநல நோக்கமும் இருக்கவில்லை. நான் எவருடைய முகவராகவும் செயற்படவில்லை. நான் என்றும் உமது ஆயுத போராட்டத்தை ஆதரித்தவனுமில்லை. எப்போதும் வன்முறையற்ற போராட்டத்திலேயே நம்பிக்கை கொண்டவனாகவே வாழ்ந்தேன். எவரையும் பகைக்காமல், அகிம்சை வழியில் எமது பிரச்சினையை வெற்றிகரமாக அணுகியிருக்கலாம் என இன்றும் எண்ணுகின்றேன். நான் உம்மை கண்டித்து எழுதிவந்தமைக்கு, இரு காரணங்கள் பிரதானமாக இருந்தன. அதில் ஒன்று தொடர்ந்து உமது குற்றங்களை சுட்டிக்காட்டிவந்தால், உம்மை அதன் மூலம் ஜனநாயக வழிக்குத் திருப்பலாம் என எண்ணினேன். எமக்கு எதுவித அந்தஸ்தும் கோராது, உமக்கு முழு ஆதரவு தந்ததன் நோக்கமும் அதுவே. மறு காரணம் உமது கட்டுப்பாட்டில் கால் நூற்றாண்டுக்குமேல் நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் விபரிக்கமுடியாத கஸ்டங்களை அனுபவித்துவந்த மக்களை, விடுதலையடையச் செய்யலாம் என கருதினேன். அம்முயற்சியில் உம்மனதை பெருமளவில் நோகடித்து உமது வெறுப்பையும் உமது போராளிகளின் கோபத்தையும் சம்பாதித்திருப்பேன். அது பற்றி நான் கவலைப்படவில்லை. என் முயற்சி சுயநலமற்ற உண்மையானதும் நேர்மையானதுமென நான் முழுக்க நம்பியதால் எனது உயிருக்கு ஏற்படக்கூடிய எந்த ஆபத்தையும் எதிர் நோக்க தயாராயிருந்தேன். எனது உண்மையான அக்கறை தமிழ் மக்களின் நன்மை தழுவியதையே பிரதிபலித்துக்காட்டியது என்பதை நீரும் பாராட்டுவீர் என திடமாக நம்புகின்றேன். இந்த நிலைப்பாட்டை எடுத்தமையால் உமக்காதரவான உலகம் முழுவதிலும் செயற்படும் அச்சு, மின் ஊடகங்கள் மூலமாக ஏற்படுத்திய அபகீர்த்தியும் மன உளைச்சலும் ஒரு மனிதனின் பொறுமையின் எல்லையை தாண்டியவையாகும். அவை மிக கீழ் தரமானவை என்றாலும் அவற்றை தாங்கிக்கொண்டேன்.

அரசியற் பிரமுகர்களாகிய இந்திய முன்னாள் பிரதமர் கௌரவ ராஜீவ்காந்தி, ஜனாதிபதி ஆர். பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ காமினி திசாநாயக்க அவருடன் பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொலைமுயற்சிகள் ஆகியவற்றில் நீர் சம்மந்தப்பட்ட கால கட்டத்திற்கு உமது சிந்தனையை பின்னோக்கி விட்டுப்பாரும். இச் செயல்களால், நீர் அடைந்த இலாபம்தான் என்ன? தமிழ்நாடு உட்பட முழு இந்தியாவினதும் சிங்கள மக்களினதும் கடும் வெறுப்பை சம்பாதித்தீர். அண்மையில் எமது இனப்பிரச்சினை சம்மந்தமாக தமிழ் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட எழுச்சி வெறும் அரசியல் இலாபந்தேடும் தந்திரமே. என்னால் மீணடும் மீண்டும் விடப்பட்ட அழைப்பை ஏற்று ஒரு தமிழ் நாட்டு தலைவரேனும் தள நிலைமையை அறிய வேண்டுமென ஆர்வம் கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் திரு. அ. அமிர்தலிங்கம் யாழ் மாவட்டசபை தலைவர் திரு எஸ் நடராசா, யாழ்மேயர் திரு. பொ.சிவபாலன், அரசியற் சட்ட வல்லுனர் கலாநிதி நீலன்திருச்செல்வம், யாழ் நகர மேயர் சறோஜினி யோகேஸ்வரன் இன்னும் பல அரச அதிகாரிகள் கல்விமான்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுர் அரசியல் வாதிகள் இது போன்று இன்னும்; பல பிரமுகர்கள் உம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உமது கொலைகள் தமிழ் தலைமையில், பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. உயர் மட்ட தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட்டமையால் தமிழர் மத்தியில் காளான்கள் போல பல புதிய தலைவர்கள் உருவானார்கள். எக்குழுவினருடனும் முரண்படாது செயற்பட்ட மிதவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை கூட நீர் விட்டுவைக்கவில்லை. சில கூட்டணி தலைவர்களை கொன்றீர். ஏனையவர் சிலரை பாராளுமன்ற பதவியைக் கொடுத்து விலைக்கே வாங்கி விட்டீர். எந்த ஒரு சிங்களவராலோ அல்லது இஸ்லாமியராலோ என்றும் ஒருவித தீங்கும் விளைவிக்கப்படாத இந்த தமிழ் தலைவர்களை, பூரணமாக அற்றுப் போகச்செய்ய அந்த தமிழ் தலைவர்கள் உமக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இஸ்லாமியரான, இந்து சமயத்தில் மிக பாண்டித்தியம் பெற்றிருந்த மன்னார் அரச அதிபராய் இருந்த என் நண்பன் ஜனாப் மக்பூல் அவர்களை நினைத்து இன்னும் அழுகின்றேன அவரைக் கொன்றதாலேயோ, அல்லது ஒரு சிங்களவர் இஸ்லாமியர் எதுவித தீங்கு விளைவிக்க எண்ணாத மற்றத்தலைவர்களை கொன்று என்ன இலாபத்தை அடைந்தீர்? படிப்படியாக உமது பெறுமதியினை இழந்ததைத்தவிர.

தமிழ் மொழியை தாய் மொழியாகக்கொண்ட இஸ்லாமிய சகோதரர்களை 10ம் திகதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக்கூட கொண்டாடவிடாது 15 அப்பாவி மக்களை பலி எடுத்தும் 40க்கு மேற்பட்டோரை காயப்படுத்தியும் உள்ளீர். இப்போதாவது உமது இரத்த வெறி அடங்கியதா? எப்படியேனும் ஓர் இனக்கலவரத்தை ஏற்படுத்தவேண்டுமென நீர் எடுத்துவரும் முயற்சியில் இதுவும் ஒனறு. உமது பொறிக்குள் இனியும் இந்நாட்டு மக்கள் விழத்தயார் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும்.

எத்தனை அப்பாவி சிங்களவர்கள், தமிழர்கள் இஸ்லாமியர்களை நீர் இரத்தத்தால் குளிப்பாட்டியுள்ளீர்? பள்ளி வாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி இஸ்லாமிய சகோதரர்களை ஒரு தடவைக்கு மேல் படுகொலை செய்துள்ளீர். பௌத்த மதத்தினருக்கு மிகவும் புனித நகராகிய அனுராதபுரத்தில் வைத்து பௌத்த யாத்திரிகளை படுகொலை செயதீர். உலகப் பிரசித்த பெற்ற புத்த பெருமானின் புனித தந்தங்களை கொண்டுள்ள கோவிலை அழிக்க முற்பட்டீர். ஓர் பேரூந்தில் நிறைந்திருந்த பௌத்த குருமாராக பிரதிக்கினை செய்யப்பட்ட சிறுவர்களை படுகொலை செய்ய உமது உள்ளம் எவ்வாறு இடம் கொடுத்தது? வட பகுதியில வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களை ஈவு இரக்கமின்றி அவர்களின் சகல சொத்துக்களையும் பறிமுதல் செய்துவிட்டு வெறும் 500 ரூபா கொடுத்து வெளியேற்றினீர். எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிறு பாலகர்களைத்தன்னும் விட்டுவைத்தீரா? பல அப்பாவி சேனை விவசாயிகளை காரணமின்றி சுட்டுத்தள்ளினீர்.

எத்தனை கிளைமோர் பொறி, நிலப் பொறி, கைக்குண்டு தாக்குதல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான பெருமளவு அப்பாவி சிங்கள மக்களையும் அவர்களுடன் அப்பாவி தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க காரணமாக இருந்திருக்கின்றீர். எத்தனை வாழ்விழந்த ஆண் பெண்கள் எத்தனை அநாதைகள் ஆகியோரை உருவாக்கியுள்ளீர்?. எத்தனை பேரை கால், கைகளை கண்பார்வையை இழக்க செய்துள்ளீர்?; எத்தனை பணக்காரர்களை ஒரே இரவில் ஓட்டாண்டியாக்கியுள்ளீர்?. அவர்களுக்கு எதைத்தான் விட்டுவைத்துள்ளீர்?. அவர்களின் விவசாயமும் கைத்தொழிலும் எங்கே?. அவர்கள் வீடுகள் வீட்டுத் தளபாடங்கள் வாகனங்கள் எல்லாம் எங்கே?. அவர்களின் கல்வி எங்கே? அத்தனையும் அழிந்து விட்டன. இதுதான் ஊழ்வினையா? என மக்கள் கேட்கின்றார்கள் அப்படியாயின் உமது கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த, இத்தனை துன்பங்களை அனுபவித்த மக்களுக்கேன் இந்த நிலை வரவேண்டும் என, பிற நாட்டிலிருந்து பண உதவி செய்து, இத்தனையும் செய்ய உமக்கு உற்சாக மூட்டிவிட்டு, தம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடும் எமது வெளிநாட்டு உறவுகளிடம் நான் கேட்கின்றேன் . இந்த அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட நஸ்டத்தை யாராலும் கணக்கிடமுடியுமா? உமது கட்டுப்பாட்டில் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த கொடூரங்களை யாராலும் விபரிக்கமுடியுமா? இதெல்லாம் முடிந்த கதை. நடந்தது நடந்ததுதான். ஆனால் அதற்கு பரிகாரமாக சிலவற்றை நீர்; தாமதமின்றி செய்தால் பலவிடயங்களில் முன்னேற்றம் காணமுடியும். தாங்கள் வைத்திருந்த இப்போது முழுக்க இழக்கும் தறுவாயில் உள்ள சில பொருட்களையேனும் மீட்டெடுக்கலாம் அல்லவா.

இவையும் இன்னும் பல விடயங்கள் நடந்துவிட்டன் உமது செயற்பாடுகள் பல தொகுப்புக்களாக எழுதலாம் அவற்றின் சுருக்கத்தின் ஓரு துளியே நான் எழுதியுள்ளவை. உமது அழிவுச் சாதனை கோடானுகோடி பெறுமதியான எமது மக்களின் உடமைகளுக்கும், உயிர்களுக்கும் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. தம் வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்த மக்கள் மீளச்சென்ற போது எதையும் காணமுடியவில்லை. எனது கிளிநொச்சி வீட்டில் கூட எதுவும் இருக்கவில்லை. ஒவ்வொரு தடவையும், இடம் பெயர்ந்து சென்ற மக்கள் தம்முடன் எடுத்துச் செல்லக்கூடியவற்றை மட்டுமே எடுத்துச்சென்றனர். திரும்ப வீட்டுக்கு வந்த போது எதுவும் கிடைக்கவில்லை மன்னார் தொடக்கம் உமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தமது உடமைகள் அத்தனையையும் கைவிட்டுவிட்டே சென்றனர். அதே போலவே வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கும் நடந்தது. இதுவே கிழக்கு மாகாண மக்களுக்கும் நடந்தது. இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் புதிதாக தற்காலிகமாக வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது வீடுகளுக்கு திரும்புவார்களோ தெரியாது. அதற்கு பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் அவர்கள் தம் வீடுகளுக்கு திரும்பும்போது அங்கே எதுவும் இருக்கப்போவதில்லை.

நான் எழுதிய கடிதங்கள் உம்மிடம் இருப்பின், அல்லது நான் எழுதியது உமக்கு ஞாபகம் இருப்பின், உமது முன் சிந்தனையற்ற செயற்பாடுகளின் விளைவுகள் புரியும். ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு போகுமாறு எத்தனை தடவை மன்றாடி கேட்டிருந்தேன். ஏதாவது ஒரு கட்டத்திலேனும் எனது புத்திமதிகளைக் கேட்டு சரியாக செயற்பட்டிருந்தால் எல்லாத்தமிழ் மக்களுக்கும் ஏதாவது மிஞ்சி இருந்திருக்கும். இப்போது கால் நூற்றாண்டுக்குமேல் ஆயுதப் போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொடுத்து எம் அனைவரையும் ஓட்டாண்டியாக்கியதுதான் மிச்சம். வட பகுதி மக்களில் எத்தனை பேர் தம் உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் இன்று உணவுப் பொட்டலங்களை பெற வரிசையில் காத்து நிற்கின்றனர். எனது ஞாபகத்துக்கு எட்டியவரையில் வன்னிப் பகுதியில் பிச்சைக்காரரை நான் சந்தித்ததே இல்லை.

நீர் நினைத்தது போல், அத்தனையும் நடக்கும் என எதிர் பார்க்கவேண்டாம். அடுத்து வரும் சில நாட்களில் எதுவும் நடக்கலாம். மேலும் மேலும் மக்கள் பசியாலும் தாகத்தாலும் மடியக்கூடும். பசிக்கெர்டுமையால் ஏற்கனவே 13 பேர் இறந்துவிட்டதாக தெரிய வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் பெரும் தொற்று நோய் கூட பெருமளவில் ஏற்படலாம். வன்னி மக்களுக்கு, பெரும் அனர்த்தம் கூட எதிர் பாராமல் நடக்கலாம் என எச்சரிக்கையாக இருக்கவும். இப்போது உமது கட்டுப்பாட்டுக்குள் அப்பாவி மக்களை வைத்திருப்பதனால் என்ன இலாபத்தை அடைகிறீர். அங்கே உம்மிடம் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட ஆண் பெண் பிள்ளைகள் ஆகியோர் உள்ளனர். அவர்களில் அநேகர் நோயாளிகளாகவும் காயப்பட்டவர்களாகவும் உள்ளனர். சிலர் முதியவர்களாகவும், நலிந்தவர்களாகவும் உள்ளனர். பல ஆண்டுகள் நீர் தொடர்ந்து போரிட்டாலும் உமது தற்போதய நிலைமைக்கு உம்மால் வர முடியுமென நான் எண்ணவில்லை. யுத்தம் முடிந்து விட்டது என்றே எம்மால் உணர முடிகிறது. இப்போது நடப்பதெல்லாம் 81000 குடுமபத்தினர் திணித்து வைக்கப்பட்டு வாழும் சிறுபகுதியை, துடைத்தெடுத்து அப்பகுதியில் யுத்ததிற்கு முற்றாக முடிவு கட்டும் பணியே நடக்கின்றது காலவரையின்றி இம் மக்களை தடுத்து வைத்திருப்பதால், எதுவித பலனும் ஏற்படப்போவதில்லை. உமது குழுவினரின் எதிர்காலம் கூட பாதுகாப்பற்ற நிலைதான். அவர்களையும் இழப்பதைவிடுத்து, தயவு செய்து புத்திசாலித்தனமாக அவர்களைக் காப்பாற்றவும். அவர்கள் அனைவரையும் சரணடையவைத்து பொதுமன்னிப்பு மூலம் காப்பாற்றலாம். அத்துடன் உமது இயக்கத்தை கலைத்துவிட்டு, இராணுவத்திடம் சரணடையவும். அவர்களைக்காப்பாற்ற இதுவும் ஒரு வழியாகும்.

உமது குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு, உமக்கு முறையான புத்திமதி கூறத்தவறியவர்களும், தமிழ் நாட்டில் சில தலைவர்களால் மிகத்தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள் சிலரையும், தவிர முழு உலகமும் உங்களுக்கு மாறாக திரும்பிவிட்டது. மக்களை மிக மோசமாக நடத்துகிறீர் என சர்வதேச சமூகம் உம்மீது குற்றம் சுமத்துகிறது. உமது செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் வன்மையாக கண்டித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு போன்ற பல அமைப்புகள்கூட நீங்கள் அப்பாவி மக்களை பலாத்காரமாக தடுத்துவைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன. பல்வேறு நாடுகளின் தலை நகர்களில் ஒன்றுகூடிய மக்கள், எம்மக்களை விடுவிக்கவேண்டுமென கேட்டார்களேயன்றி, உமக்காகபேசவில்லை. உமக்கு அவர்கள் விடுத்த செய்தி எமது மக்களை விடுவிக்கவேண்டும் என்பதே. தமிழ் மக்களை காப்பாற்றும் முழுப்பொறுப்பும் இப்போது உமது கையிலேயே.. அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர் நீரே. ஆகவே எதுவித தாமதமும் இன்றி மக்கள் எங்கே போக விரும்புகிறார்களோ அங்கே போக அனுமதிக்கவும். உம்மை ஆண்டவனின் பெயரால் கேட்கின்றேன் தயவு செயது, சுயநலத்துடன் செயற்படும் உமது இடத்தை பிடிக்க, ஆவலுடன்காத்திருக்கும் அரசியல் கழுகுகளிடம் மக்களை பாரம் கொடுத்து, போதிய கஸ்டங்களை அனுபவித்த மக்களின் துன்பமான வாழ்க்கையை மேலும் நீடிக்கவிடாது, சுதந்திரமாக வாழவிரும்பும் மக்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள். துப்பாக்கிகளை திரும்பி பார்க்கவே அவர்கள் இப்போது விரும்புகிறார்கள் இல்லை விளையாட்டு துப்பாக்கிகள் உட்பட.

இக்கட்டத்திலேனும் துப்பாக்கிகளை கைவிட்டு, யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவும். சாவதேச ஆதரவுடன் கண்ணிவெடிகளை அகற்ற அதிககாலம் எடுக்காது. விரைவில் வன்னிப்பகுதிமக்கள் தமது இல்லங்களுக்கு திரும்பி, எஞ்சியுள்ள தமது பொருட்களையும் மீட்டெடுக்க முடியும். இப்போது கூட நீர் எனது புத்திமதியை கேட்கத்தவறின், ஏற்கனவே மக்கள் இழந்தது போக அவர்களின் எஞ்சியுள்ள பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை அவர்கள் இழப்பதற்கு நீரே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப நீண்ட காலமெடுக்குமாயின் அவர்களின் சொத்துக்கள் எதுவும் அவர்களுக்கு இல்லாமல்போய்விடும். இதுவே நான், உமக்கு நம்பிக்கை அத்தனையையும் இழந்தநிலையில் விடுக்குன், இறுதி வேண்டுகோளாகும். மிக தாழ்மையாக விடுக்கும் வேண்டுகோள். நாம் அனைவரும் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் பறங்கியர் மலாயர்கள் உடன் ஏனைய இன மக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதே. இந்த நாட்டீன் அமைதியை குலைத்த நீரே நிரந்தர சமாதானத்தையும் தரக்கூடிய தனி நபராகும்.

ஓர் இடைக்கால ஒழுங்காக, அரசை யுத்தத்தை நிறுத்துமாறு கேட்காது, நீரும் பதிலுக்கு அதேபோல் நடக்க சம்மதித்தால், விமான தாக்குதல், செல் அடித்தல், பீரங்கித்தாக்குதல் முதலியவற்றை நிறுத்தினால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம். அப்படியானதோர் நிலையில் அரசாங்கத்தை போதிய உணவு வகைகளையும் மருந்துவகைகளையும் மக்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம். உமது பங்கிற்கு நீர் செல் அடிகளையும் பீரங்கித்தாக்குதல்களையும் உடன் நிறுத்தவேண்டும்.
நன்றி,

அன்புடன்,

வீ. ஆனந்தசங்கரி,

தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • Kusompan
    Kusompan

    யாருக்கு இந்தக்கடை சொல்லுகிறீர் சங்கரி! நீர் என்னதிறமோ? கூத்தணிக்குள் இருந்தே குளறுபடி செய்து தலைவராய் வரமுடியாமல் காட்டிக் கொடுக்க வெளிக்கிட்ட நீர் அண்ணையைப்பற்றிக் கதைக்கிறீர். அண்ணை உம்மைப்போல் எதிரியிடைப்போய் பதுங்கியவர் இல்லை. இன்றும் களத்தில்தான் நிற்கிறார். ஏலும் என்றால் போய் சந்தியும். இழப்பில்லாத விடுதலை கிடையாது தெரியுமோ?

    Reply
  • damilan
    damilan

    ஐயா ஆனந்த சங்கரி அவர்களின் மடலை பார்க்கும் போது மனதிற்கு கஸ்டமாகவும் அதிலுள்ள ஒவ்வெரு சொல்லின் உண்மையையும் நியாயத் தன்மையையும் பார்த்தால் எந்தக் கல்லு மனம் உள்ளவனின் உள்ளமும் கரையக் கூடியது. அதிலுள்ள வாதத்தன்மையைப் பார்த்தால் எந்த நியாய வாதியினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது.சுயநலமில்லாதது. அதிலுள்ள கண்டிப்பைப் பார்த்தால் அது அன்பால் வெளிவருவது.

    அவரது நட்பைப் பார்த்தால் துரதிஸ்டம் அதை அனுபவிக்க அவரின் நண்பனுக்கு கொடுத்து வைக்காதது. இவரது பேச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. எந்த சுயநலனுமில்லாது எழுதப்பட்டது. தனது கொள்கைக்கு எதிரானவராக இருந்தாலும் அவரையும் காப்பாற்ற நினைப்பது. தனது அந்தஸ்த்து பதவி கெளரவம் வயது அனுபவம் எல்லாவற்றையும் விட்டு மக்களின் நலனுக்காக மக்களின் வாழ்விற்காக தனது அரசியல் கொள்கைக்கு எதிரானவரிடம் கடைசியாகவும் உறுக்கமாகவும் கையேந்தி நிற்பதைப் பார்க்கும் போது மனம் நெகிழ்கிறது.

    Reply
  • thushiyanthan
    thushiyanthan

    குசோம்பன் நீர் சங்கரிக்கு எதிரானவர் எண்ற ஒரே காரணத்தால் நீர் அண்ணன் எண்று குறிப்பிடும் பிரபாகரன் எதிரியிடம் பதுங்காமல் இருந்த்திருக்கலாம் ஆனால் அவரது பொடியளை இந்திய இரானுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலங்களில் சிறி லங்கா பொலிஸ் மற்றும் இரானுவ முகாம்களில் பாதுகாப்பாக பதுக்கி வைத்து மாற்று இயக்க உறுப்பினர்கள் எ9 பாதையினூடாக பயணம் செய்கிண்ற போது முகாம்களுக்கு அழைத்துச் செண்றதோ அல்லது அம் முகாம்களிலேயே கொலை செய்யப்பட்டதோ உமக்கு தெரிந்திருக்கவில்லையோ? இலங்கை இரானுவத்தை எதிர்க்க இந்திய இரானுவத்தை பயன் படுத்கியது பின்னர் இந்திய இரானுவத்தை எதிர்க்க பிரேமதாசாவின் ஆசீர்வாத்ததுடன் இலங்கை இரானுவத்துடன் கை கோர்த்தது எல்லாம் உமது பார்வையில் எதிரியின் நிழலில் பதுங்கியதாக புரியவில்லையோ? மற்றது சங்கரியார் பிரபாகரனை கிளினொச்சி செண்று ஆசீர்வாதம் பெற்று கொழும்பில் இருந்து கொண்டு டக்ளஸுக்கு வாய்ச்சண்டை காட்டியதற்காக பிரபாகரனிடம் வாழ்த்தும் பெற்றுவந்தவர். இது கூட உங்களுக்கு தெரிந்திருக்கவில்லையா?

    பிரபாகரன் ஒரு வேளை மனம் மாறி தமிழ்ச்செல்வன் மூலமாக சங்கரியாரை வரச்சொல்லும் அந்த மனிதனையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வைப்போம் என கூறியிருந்தால் விளுந்தடித்து கிளினொச்சி செண்றிருப்பார்

    சம்பந்தன் ஓரம் கட்டப்பட்டு இண்று சங்கரிதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமண்றக் குழுத்தலைவராகவும் இருந்திருப்பார். வைகோ முதல் திருமாவளவன் வரை செண்று சந்தித்திருப்பார்.

    இண்று உண்மையிலேயே வன்னி மக்கள் படும் துயரங்களை வெளிக்கொண்டு வந்திருப்பார். அவர் பிரபாகரனின் கரம் சேர முடியாத பல கடிதங்களை எழுதியிருக்கிண்றார், இதுகும் அப்படியொண்றுதான், ஆனாலும் இக் கடிதத்தில் பல தவறுகளை தெரிந்த்தோ தெரியாமலோ எழுதித் தள்ளிப்போட்டார். அதாவது மனச்சாட்சி எண்ற சொல்லுக்கே அர்த்தம் புரியாத சங்கரியார் யாரிடமும் மனச்சாட்சி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாதவர்.

    சங்கரியார் தனது அரசியல் அபிலாசைகள் நிறைவேறும்வரை மற்றவர்களை பயன்படுத்துவதும் தேவைகள் நிறைவடைந்த்ததும் துக்கி எறிவதோடு மட்டுமாவது நிறுத்தாமல் அனாவசியமாக பழி சுமத்துவதும் சங்கரிக்கு கை வந்த கலை.

    இவரது மனச்சாட்சியின் கபடத்தை சென்னையில் கிருஸ்ணராஜா பரந்தன் இராஜன் ஜேர்மணியில் இராமச்சந்திரன் லண்டணில் கனேந்திரன் போண்றோரிடம் விசாரித்தால் சங்கரியின் மேலும் பல குப்பைகள் வெளிவரும்

    Reply
  • Kusumpan
    Kusumpan

    துசியந்தன்!. அண்ணன் யாரிடமும் பதுங்கியதோ; மண்டியிட்டதோ கிடையாது. ஏன் அபாண்டமாக பொய் சொல்கிறீர்கள். எதிரிக்கு முகம் கொடுப்பது மட்டுமல்ல சிம்மசொர்ப்பனமாக இருப்பர்கள் அண்ணணும் அண்ணனின் படையும்தான். நாட்டின் நிலமை தெரியாதோ? நீர் சொன்னமாதிரி அண்ணன் நினைத்திருந்தால் சங்கரி எங்கருந்திருப்பார் என்பதை அறிந்ததுக்கும் அறிவித்ததுக்கும் நன்றி. அண்ணனின் புலிப்படை வெல்லும் அப்போ நீர் தேசத்துக்கு வந்தால் நான் உம்மிடம் கேட்போன். இராஜதந்திரம் என்பது அண்ணனின் இரத்தத்துடன் கூடிப்பிறந்தது. இது எல்லாம் பின்வாங்கல் இல்லை வெற்றியின் படிகள். வெற்றியை நாளை சரித்திரம் கொல்லும்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உரியகாலத்தில் உரிய தீர்மானங்களை முடிவுகளை துணிகரமாக வெளியிடுவது என்பது தான் தலைமை. முப்பது வருடகாலமாக சிங்கள அரசுக்கு மட்டுமல்லாமல் தமிழ்மக்களுக்குமே கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிற பிரபாகரனுக்கு மடல் ஏழுதி மடக்க முடியுமா? என்பதை சங்கரி அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
    தமிழ்மக்களுக்கு இன்றைய தேவை விடுதலையென்ற பெயரில் தோன்றிய பயங்கரவாதத்ததையும் பேரினவாதிகளை தோற்கடிக்கடிக்க கூடிய தலைமையை உருவாக்குவதே தமிழ்மக்களின் தேவை என்பதை ஆனந்தசங்கரி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    Reply
  • thushiyanthan
    thushiyanthan

    குசோம்பன் நான் உம்முடன் தர்க்கப்படுவதில் அர்த்தமில்லை என நினைக்கிண்றேன், காரணம் இந்திய இரானுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தவேளை கொழும்பில் இருந்து யழ்ப்பாணம் செண்றுகொண்டிருந்த என்னை புத்தளம் காவல் நிலையத்தில் வளிமறித்த புலிகள் என்னையும் இன்னுமொருவரையும் சிரிலங்கா முகாமுக்கு அழைத்துச்செண்று துருவித்துருவி விசாரனை செய்து தகாத வார்த்தகளால் திட்டி இருதினங்கள் தடுத்துவைத்து பலத்த எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டவன் எண்ற வகையில் எனக்கு புலிகள் எங்கெங்கு பதுங்கியவர்கள் என்பது நண்றாகவே தெரியும்.

    சந்திரன் சொல்வது முற்றிலும் உண்மை, பிரபாகரனுக்கு கடிதம் யார் வேண்டும் எண்றாலும் எழுதிக்கொண்டிருக்கலாம், காரணம் பிரபாகரன் ஒருபோதும் திருந்த மாட்டார் என்பதை உணராதவர்கள் தானே சங்கரி போண்றோர், ஆனால் சந்த்திரன் சொல்வது போல இன்னொரு தலைமை உருவாவதோ உருவாக்குவதோ சங்கரி போண்ற போலி ஜனநாயகவாதிகள் ஒருபோதும் விரும்பப் போவதில்லை. அப்படியே உருவாகிவிட்டால் இவர்களது வாழ்க்கைப் பிழைப்பு என்னவாகும்?

    Reply
  • thurai
    thurai

    புலியே புலியே உன் பல்லைக் களட்டித்தா,
    புலியே புலியே புல்லைத்தின்னப் பழகு,
    புலியே புலியே மானையும் மயிலையும் வாழவிடு,

    ஆயிரம் முறை கூறினாலும் நடக்கிற காரியமா?

    துரை

    Reply
  • palli
    palli

    பிரபாவின் மாவீரர் உரையும். சங்கரியின் தம்பிக்கு கடிதமும் ஒன்றுதான். என்ன ஒரு வேறுபாடு எனில் பிரபா யாரும் எழுதிகொடுக்க அதை தனது உரையாக வருடம் ஒரு தடவை வாசிப்பார். சஙரியர் கடிதம் எழுத அவரது எம்பலப்புகள் அதை பிறேம் போட்டு அழகு பார்பதும் இல்லாமல் எம்மையும் கடுப்பேத்துவார்கள். ஏற்க்கனவே பல்லிபோல் பலருக்கு(தேசம் வாசிப்பவர்களுக்கு) இரத்த அழுத்தம் அதில் இப்படியான கடிதம் அதை கூட அல்லவா செய்கிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சங்கரி ஐயா உங்களது திறந்த மடலை, திறந்து படிக்க வன்னித் தலைவருக்கு எங்கே நேரம்?? உஙக கடிதத்தை படிப்பதா அல்லது உயிரைக் காப்பாற்ற ஓடியோடி ஒளிவதா??

    Reply
  • palli
    palli

    அது சரிதான் ஜயாவும் யாரும் படிப்பதுக்காக கடிதம் எழுதுவதில்லைதானே. ஏதோ தனது பொழுது போக்குக்கு பேனா நண்பர்கள் போல் தனக்கு தெரிந்த சிலருக்கு அடிக்கடி எழுதுவார். பலது அவரது காரியாலயத்திலேயே தூங்குவதாக அங்கு தூங்கும் ஒருவர் சொன்னார்.

    Reply
  • hazan
    hazan

    பல்லி சங்கரி எழுதுற கடிதத்தை ஒரு வெப்சைட்டுக்கு அனுப்பினால் போதும். அது காலத்தால் அழியாததாகிவிடும். அதோட பின்னூட்டம் எழுத நம்போன்றோர் இருக்க அது சக்சஸ்தானே.

    Reply
  • palli
    palli

    கஜன் ஒரு தளத்தை ஏன் குழப்புவான். அதுக்கு பதிலாய் சுண்டல் விற்பவரிடம் பழய பேப்பருக்கு கொடுத்து உதவலாமே.

    Reply